புதுச்சேரி: புதுச்சேரியில் கரோனா நோய்ப் பரவல் பெருமளவு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. கரோனாவை கட்டுப்படுத்துவதில் அரசுடன் இணைந்து பணியாற்றிய துணை மருத்துவக்கல்வி பயிலும் மாணவர்களின் பங்களிப்பினைப் பாராட்டும் விதமாக, அன்னை தெரசா பட்ட மேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் சிறப்பூதியம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்து கொண்டு, 119 மாணவர்களுக்கு தலா ரூ. 10 ஆயிரம் வீதம் சிறப்பூதியம் வழங்கினார்.
இளைஞர்களே பக்க பலம்
அப்போது அவர் பேசுகையில், ”புதுச்சேரியில் கரோனாவைக் கட்டுப்படுத்துவதில் தன்னார்வலர்கள், குறிப்பாக இளைஞர்கள் பக்க பலமாக செயல்பட்டார்கள். இளைஞர்களின் ஒத்துழைப்பு, கரோனா முன்களப் பணியாளர்களுக்கு அதிக பலத்தை கொடுத்தது. இக்கட்டான சூழலை மிகச் சிறப்பாகக் கையாள துணை புரிந்திருக்கின்றனர்.
நன்றியும், பாராட்டும்...
வேறு எந்த மாநிலத்தை விடவும், புதுச்சேரியில் கரோனா சிறப்பான முறையில் கையாளப்பட்டிருக்கிறது என்பதில் நமக்கு பெருமை உண்டு. ஓய்வில்லாமல் கடுமையாக உழைத்த அனைவருக்கும் எனது நன்றி, பாராட்டைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நீட் தேர்வு அவசியம் தேவை
ஒரு மருத்துவர் என்ற முறையில், நீட் தேர்வு அவசியம் தேவை. மிகப்பெரிய மருத்துவக் கல்லூரி உரிமையாளரின் மகளாக இருந்தாலும், நீட் தேர்வில் வெற்றி பெற்றால்தான் மருத்துவராக ஆக முடியும்” என்றார்.
நிகழ்ச்சியில் பொதுப்பணித்துறைச் செயலர், கரோனா பொறுப்பு அலுவலர் விக்ராந்த் ராஜா, சுகாதாரத்துறைச் செயலர் அருண், அன்னை தெரசா நிறுவனத்தின் முதல்வர் ஜெயந்தி ஆகியோர் உடனிருந்தனர்.
இதையும் படிங்க: 'நீட்... மேகதாது... கொங்குநாடு...!' - டக் டக் என ஆன்சரை அடுக்கிய அண்ணாமலை