தெலங்கானா மாநில ஆளுநராக தமிழிசை சௌந்தர்ராஜன் பதவியேற்று ஓராண்டு முடிந்த நிலையில், தனது ஓராண்டு சாதனை புத்தகத்தை சென்னை கிண்டியில் உள்ள தனியார் விடுதியில் இன்று வெளியிட்டார். அப்போது பேசிய அவர், “தெலங்கானா ஆளுநராக நான் தேர்ந்தெடுக்கப்பட்டது, சற்றும் நான் எதிர்பாராதது. புதிய மாநிலத்திற்கு அனுபவமில்லாத புதிய ஆளுநர் நியமிக்கப்பட்டிருப்பதாக அங்கும் பலத்த விமர்சனங்கள் எழுந்தன. எனவே தான் அங்கு பத்திரிகையாளர்களை சந்தித்த போது, தான் ஒரு மருத்துவர் என்றும், எனவே குழந்தையை பேணிக் காப்பதுபோல தெலங்கானாவை காப்பேன் எனக் கூறினேன். இப்போது எனது நிர்வாகத் திறனை தெலங்கானா மக்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர்.
ஒரு பெண் அரசியல் தலைவராக செயல்படுவது சாதாரண விஷயமல்ல. எந்த இடத்திலும் அவள் சறுக்கி விடக்கூடாது. 16 வயதினிலே திரைப்படத்தில் பரட்டை கதாபாத்திரத்தில் ரஜினிகாந்த் நடித்ததற்குப்பின், தமிழகத்தின் அடுத்த பரட்டை நான் தான் என பலரும் கேலி செய்த நிலையில், தான் அதை பொருட்படுத்தவேயில்லை. பரட்டையாக இருக்கலாம் ஆனால், யார் பணத்தையும் நான் சுருட்டியதில்லை. கருப்பாக, குள்ளமாக இருந்தாலும், மக்களுக்கு உதவக்கூடிய குணத்தில் நான் உயர்ந்தவள்.
என் தந்தை ஒரு இயக்கத்தில் செயல்படும் போது, அதற்கு நேர் மாறான ஒரு இயக்கத்தை நான் தேர்வு செய்த போது, குடும்பத்தில் மிகப்பெரிய பிரச்சனை எழுந்தது. ஓராண்டு காலம் என் குடும்பத்தினர் யாரும் என்னுடன் பேசவில்லை. இப்படியான பல்வேறு நிலையிலும், என் கணவர்தான் உறுதுணையாக இருந்து என்னை வழி நடத்தினார்.
தனது பிறந்தநாளின்போது இரவு 9 மணி வரை தமிழகம் மற்றும் தெலங்கானா மாநில பொதுமக்களிடமிருந்து வாழ்த்துகள் வந்தன. எனினும் தமிழக மக்கள் என்னை ஏற்காதது சிறு வருத்தம்தான். எனினும் மக்கள் ஏற்கும் வரை மக்களுக்கு சேவையாற்றுவேன். என் வாழ்க்கை மக்களுக்கானதுதான்” என்றார்.
இதையும் படிங்க: ரமலான் திருநாளில் சிபிஎஸ்இ தேர்வுகளா? - தேதியை மாற்றக்கோரி சு. வெங்கடேசன் எம்பி கடிதம்