தமிழ்நாடு பாஜக தலைவராக பணியாற்றிவந்த தமிழிசை சௌந்தரராஜன் தெலங்கானா மாநில ஆளுநராக அதிரடியாக நியமிக்கப்பட்டார். இதற்கான பணி ஆணையை டெல்லியில் உள்ள தெலங்கானா பவனின் அலுவலர் வேதாந்தகிரி தமிழிசையிடம் அளித்தார்.
நியமன ஆணையைப் பெற்றுக்கொண்ட தமிழிசை சௌந்தரராஜன் செய்தியாளர்களிடம் பேசியதாவது, இந்த வாய்ப்பளித்த பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தலைவர் ஜே.பி. நட்டா உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி தெரிவிக்கிறேன் என்றார்.
மேலும் அவர், ஒரு தமிழ் மகளாக தமிழ்நாடு - தெலங்கானா மாநிலங்களுக்கு இடையே பாலமாகச் செயல்படுவேன் எனவும், தமிழ் மக்களின் பிரதிநிதியாகவும் தெலுங்கு மக்களின் சகோதரியாகவும் செல்வதாக தெரிவித்தார்.
அதைத் தொடர்ந்து அவர், கொடுக்கப்பட அனைத்து வேலைகளிலும் தேர்ச்சி பெறுவதுதான் எனது வழக்கம், ஆளுநர் பதவியிலும் சிறப்பாக செயல்படுவேன் என நம்புகிறேன். ஆலோசனை, விதிமுறைகள் நிறைவு பெற்றதும் தெலங்கான ஆளுநராக செயல்படப் போகிறேன் என தமிழிசை கூறினார்.