கரோனா வைரஸ் காய்ச்சல் காரணமாக பிலிப்பைன்ஸ், பிரிட்டன், ஈரான், மலேசியா போன்ற நாடுகளில் சிக்கியிருக்கும் தமிழக மாணவர்கள், மீனவர்களை மீட்பது தொடர்பாக இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம், பிரதமர் மோடியிடம் அரசு வலியுறுத்த வேண்டும் என திமுக, காங்கிரஸ், மனிதநேய ஜனநாயக கட்சி உறுப்பினர்கள் சட்டப்பேரவையில் இன்று சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்து பேசினார்கள்.
அதற்கு பதிலளித்த வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்,
”பிலிப்பைன்ஸ் நாட்டின் மணிலாவில் உள்ள மாணவர்களை மீட்பது தொடர்பாக முதலமைச்சர், வெளியுறவுத்துறையுடன் தொடர்ந்து பேசிவருகிறார். மேலும் அவர்களுக்குரிய உணவு, பாதுகாப்பு கிடைக்க மத்திய அரசிடம் பேசி நடவடிக்கை எடுத்துள்ளார்.
அதேபோல மலேசியாவில் சிக்கித் தவித்த மாணவர்களை மீட்க அரசு நடவடிக்கை எடுத்ததன் பயனாக, 170 மாணவர்கள், விசாகப்பட்டினம் விமான நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டு, மருத்துவக் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். ஈரானில் உள்ள இந்தியத் தூதரகம் அங்குள்ள மீனவர்களுடன் தொடர்பில் இருக்கிறது. அவர்கள் அங்கு மிகவும் பாதுகாப்பாக உள்ளனர் “ எனக் கூறினார்.
இதைத் தொடர்ந்து பேசிய அமைச்சர் ஜெயக்குமார், “ உலகம் முழுவதும் சிக்கித் தவிக்கும் தமிழர்களை போர்க்கால அடிப்படையில் மீட்பதற்கு முழுமையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுவருகின்றன. நான் நினைத்தால் இன்றே ஈரான் சென்று விடுவேன். அப்படி அங்கு போனால் ஈரானில் என்னை 14 நாள்கள் வைத்து விடுவார்கள். தமிழ்நாட்டிலும் பரிசோதனைக்காக வைத்து விடுவார்கள். அதனால் போக முடியவில்லை “ என்றார்.
இதையும் படிங்க: பொதுத்தேர்வுகள் தள்ளிவைப்பு? - தீவிர ஆலோசனையில் கல்வித் துறை