உலகத் தமிழ் மக்களுக்கு தமிழ் புத்தாண்டு வாழ்த்துச் செய்தியை மத்திய நிதி மற்றும் கப்பல் போக்குவரத்துத் துறை இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ளார், அதில் 'உலகம் முழுவதும் பரவி உள்ள என் தமிழ் சொந்தங்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவிப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகின்றேன். விளம்பி ஆண்டு முடிந்து, விகாரி தமிழ்ப் புத்தாண்டு பிறக்கின்றது. இந்த புத்தாண்டு நன்னாளிலே புது யுகத்தை படைத்தாக வேண்டும்.
இன்றைய நவீன காலத்தினுடைய தன்மைக்குத் தக்கபடி புதிய இளம் தலைமுறையினருக்கு தமிழ் கூறும் நல்லுலகம் துணையாக நின்று தொன்மையோடு கூடிய புதிய ஒரு யுகத்தை படைக்கக்கூடிய வகையில் நம்முடைய இளைஞர்களுக்கு புத்துணர்வை நாம் கொடுத்தாக வேண்டும்.
பழம் பெருமை பேசுகின்ற ஒரு சமுதாயமாக தமிழ் சமுதாயம் இல்லை, பழம் பெருமையோடு கூட, புதிய, நவீன கண்டுபிடிப்புகள், நவீன தலைமுறைக்கான அணுகுமுறைகள், செயல்பாடுகள் இவை அனைத்தும் கொண்டதாக தமிழ்ச் சமுதாயம் புது வடிவம் பெற்று விளங்குகின்றது என்கின்ற ஒரு செய்தியை கொடுக்கக்கூடிய ஆண்டாக விகாரி ஆண்டு திகழ்ந்தாக வேண்டும்.
தமிழர்கள் மீது அன்பும், பாசமும் கொண்டிருக்கின்ற ஒரு பிரதமர் கிடைத்திருப்பது நாமெல்லாம் பெற்ற மிகப்பெரிய பேறு என்பதை மனதில் வைத்துக்கொண்டு, அரசியல்வாதிகள் சுயலாபங்களுக்காக, அரசியல் ஆதாயங்களுக்காக தமிழையும், தமிழனுடைய பெயரையும் பயன்படுத்தி அரசியல் செய்யாமல், தமிழனுக்கு, தமிழ் சமுதாயத்திற்கு, தமிழுக்கு எது உயர்வை கொடுக்கும் என்பதை மனதில் புரிந்து கொண்டு, இந்த ஐந்து ஆண்டுகளில் பிரதமர் நரேந்திர மோடி செய்திருக்கின்ற தமிழர்களுக்கான நல்ல திட்டங்களை ஏற்றெடுத்து, இனி வருகின்ற காலத்திலே அதை அதிகப்படுத்தக்கூடிய முயற்சியில் அனைவரும் இறங்க வேண்டும்' எனத் தெரிவித்துள்ளார்.