இந்தியாவின் இளம் மாநிலமான தெலங்கானா, 2014ஆம் ஆண்டு ஒருங்கிணைந்த ஆந்திரப் பிரதேசத்திலிருந்து பிரித்து உருவாக்கப்பட்டது. மேலும் ஆந்திரா, தெலங்கானா என இரு மாநிலங்களுக்கும் தலைநகராக ஹைதராபாத் அடுத்த 10 ஆண்டுகளுக்குச் செயல்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.
அதன்படி, இரண்டு மாநில அரசுகளும் ஹைதராபாத்தில் இருந்த தலைமைச் செயலகத்திலிருந்து 2024ஆம் ஆண்டு வரை செயல்படும் என்று முடிவுசெய்யப்பட்டது. சுமார் 25.5 ஏக்கர் பரப்பளவில் 10 பிளாக்குகளில் அமைந்திருந்த தலைமைச் செயலகம் 58:42 என்று விகிதத்தில் ஆந்திராவுக்கும், தெலங்கானாவிற்கும் பிரிக்கப்பட்டது.
கடந்த ஆண்டு வரை ஆந்திரப் பிரதேச தலைமைச் செயலக அலுவலர்கள் ஹைதராபாத்தில் அமைந்திருந்த தலைமைச் செயலகக் கட்டடத்திலிருந்தே செயல்பட்டனர். இந்தச் சூழலில், 2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஆந்திரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றிபெற்ற ஜெகன் மோகன் ரெட்டி, தங்களுக்கான தலைநகரை அமராவதியில் விரைவாக உருவாக்க முனைப்பு காட்டினார்.
தொடர்ந்து தெலங்கானா தலைமைச் செயலகத்தில் செயல்பட்டுவந்த ஆந்திர அரசின் பிளாக்குகளையும் தெலங்கானா அரசிடமே ஒப்படைத்தார். ஏற்கனவே, புதிய மாநிலத்திற்கு புதிய சட்டப்பேரவையைக் கட்டியெழுப்ப வேண்டும் என்று சிந்தித்துக்கொண்டிருந்த சந்திரசேகர் ராவுக்கு, ஜெகன் மோகனின் இந்த முடிவு ஏற்றார்போல அமைந்தது.
இதனால், 1950களின் தொடக்கத்தில் ஹைதராபாத் நிஜாம்களால் கட்டப்பட்ட பழைய தலைமைச் செயலகக் கட்டடத்தை இடித்துவிட்டு, புதிய கட்டடத்தைக் கட்டும் வேலையில் மும்முரம் காட்டினார் சந்திரசேகர் ராவ். தெலங்கானாவின் வரலாற்றையும் சிறப்புகளையும் பறைசாற்றும் வகையில், புதிய தலைமைச் செயலகம் அமைய வேண்டும் என்பதில் தெளிவாக இருந்தார் அவர்.
அதன்படி, புதிய ஒருங்கிணைந்த சட்டப்பேரவை வளாகத்தை வடிவமைக்கச் சரியான நபரை நீண்ட காலமாக அம்மாநில அரசு தேடிவந்தது. இறுதியாக, தற்போது தமிழ்நாட்டைச் சேர்ந்த ஆஸ்கர்&பொன்னி என்ற கட்டடக் கலை நிறுவனத்தை தெலங்கானா அரசு தற்போது தேர்வுசெய்துள்ளது.
அதன்படி, தெலங்கானாவின் புதிய சட்டப்பேரவை அம்மாநிலத்தின் கட்டடக் கலை, கம்பீரமான மற்றும் பாரம்பரிய நினைவுச் சின்னங்கள், பிரமாண்ட தூண்கள், கோபுரங்கள் என மாநிலத்தின் வரலாற்றையும் வீரத்தையும் பிரதிபலிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. சந்திரசேகர் ராவுக்கு வாஸ்து சாஸ்திரங்களில் அதிக நம்பிக்கை உண்டு என்பதால், அதை மனதில் வைத்துக்கொண்டும், பாரம்பரிய டெக்கான் ககாட்டியா பாணியிலும் இந்தச் சட்டப்பேரவை கட்டப்படவுள்ளது.
தற்போது சட்டப்பேரவைக்காக ஒதுக்கப்பட்டுள்ள 25 ஏக்கர் பரப்பளவு கொண்ட நிலத்தில், தலைமைச் செயலகக் கட்டடத்திற்கு மூன்றில் ஒரு பங்கிற்கும் குறைவான நிலமே பயன்படுத்தப்படும். மீதமுள்ள இடத்தில், பூர்வீக தாவரங்களும் நீரூற்றுகளும் இடம்பெறும். இதன்மூலம் இதை ஒரு பசுமையான சட்டப்பேரவையாக உருவாக்கத் திட்டமிட்டுள்ளனர். பாதுகாப்பு விதிமுறைகளுக்கும், தேசியக் கட்டடக் குறியீடு, இந்தியப் பசுமைக் கட்டட கவுன்சிலால் பரிந்துரைக்கப்பட்ட வழிகாட்டுதல்களுக்கும் ஏற்ற வகையில், இந்தச் சட்டப்பேரவைக் கட்டடம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
ஏழு லட்சம் சதுர அடி பரப்பளவிலான நிலத்திற்குக் கீழே ஒரு தளம், மேலே ஐந்து தளம், அதாவது G+5 என்ற அமைப்பில் தெலங்கானா சட்டப்பேரவை கட்டப்படவுள்ளது. இதுதவிர, தெலங்கானா மாநிலத்தின் வரலாற்றை எடுத்துக்காட்டும் "தெலங்கானா ஹால் ஆஃப் ஃபேம்" (Telangana Hall of fame) என்ற கட்டடமும் சட்டப்பேரவையின் மையத்தில் அமையவுள்ளது.
மாநிலத்தின் கலாசாரத்தைப் பிரதிபலிக்கும் காட்சிகளும் 33 மாவட்டங்களைச் சேர்ந்த பழம்பெரும் கலைப்பொருள்களும் அலங்கரிக்கும் வண்ணம் அமைக்கப்படவுள்ளது. ஹைதராபாத் அருகே அமைந்துள்ள நீலகண்டேஸ்வரர் சிவன் கோயிலைப் பிரதிபலிக்கும் வகையில், கோபுரங்கள் இந்தப் புதிய சட்டப்பேரவையில் வடிவமைக்கபடவுள்ளது.
மிகப் பெரிய புத்தரின் சிலை அமைந்துள்ள உசைன் சாகர் ஏரியை எதிர்நோக்கி அமையவுள்ள இந்தச் சட்டப்பேரவை, மன இறுக்கத்தைக் குறைக்கும்படியான நுழைவாயிலைக் கொண்டுள்ளது. இந்தப் பிரமாண்ட சட்டப்பேரவைக் கட்டடத்தில் முதலமைச்சரின் அலுவலகம் ஆறாம் மாடியில் அமையவுள்ளது.
வாஸ்துபடி அமைக்கப்பட்டுள்ள முதலமைச்சரின் இந்த அலுவலகத்திற்குச் சிறப்புப் பாதுகாப்பு வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. சட்டப்பேரவை வளாகத்திலிருந்து நேரடியாக முதலமைச்சர் தனது அலுவலகத்திற்குச் செல்ல தனியே ஒரு சிறப்பு நுழைவாயிலும் அமைக்கப்படவுள்ளது.
கட்டடத்தின் மற்ற தளங்களில் முதலமைச்சரின் தனிச் செயலர்கள், அமைச்சர்கள், தலைமைச் செயலக அலுவலகர்கள் ஆகியோருக்கான அறைகளும் ஒதுக்கப்படவுள்ளன. இவை தவிர ஆலோசனை நடத்த ஆயிரம் இருக்கைகளுடன் கூடிய மிகப் பெரிய ஆடிட்டோரியம், ஆவணக் காப்பகம், விஐபி காத்திருக்கும் அறைகள், காவல் துறை கண்காணிப்பு அறைகள் ஆகியவற்றுடன் பிரம்மாண்ட வரவேற்புப் பகுதியும் அமையவுள்ளது.
இந்தச் சட்டப்பேரவைக் கட்டடம் தனக்குத் தேவையான மின்சாரத்தில் பெரும்பகுதியைத் தானே உற்பத்தி செய்துகொள்ளும். இதற்காகவே சட்டப்பேரவையில் மேற்கூரையில் சோலார் பேனல்கள் பொருத்தப்பட்டிருக்கும். இந்தக் கட்டடத்தை உருவாக்க தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஆஸ்கார்&பொன்னி ஆர்கிடெக்ட்ஸ் நிறுவனம் பல ஐடி கட்டடங்களை வடிவமைத்த அனுபவம் பெற்றது. இந்தச் சட்டப்பேரவைக் கட்டடத்திலும் சில புத்தம் புதிய தொழில்நுட்பங்களை இணைத்துள்ளனர்.
அதன்படி, 'Internet of Things' என்ற தொழில்நுட்பத்தில் இந்தத் தலைமைச் செயலகம் முற்றிலும் இணைக்கப்பட்டிருக்கும். உதாரணத்திற்குச் சொல்ல வேண்டும் என்றால் நமது உடலிலிருந்து வெளிப்படும் வெப்பத்தை தெர்மல் ஸ்கேனர் மூலம் ஆராய்ந்து, அதற்கேற்ப நாம் போகும் பாதையில் இருக்கும் லைட்டுகள் தானாகவே ஆன், ஆஃப் ஆகும்.
இப்படி அட்டகாசமான பல வசதிகளைக் கொண்டிருக்கும் தெலங்கானாவின் புதிய சட்டப்பேரவைக் கட்டடத்தை 130க்கும் மேற்பட்ட விருதுகளை வாங்கி குவித்த தமிழ்நாட்டைச் சேர்ந்த ஆஸ்கர்&பொன்னி நிறுவனம் வடிவமைக்கவுள்ளது. தமிழர்களின் கைவண்ணத்தில் அடுத்த ஓராண்டுக்குள் தெலங்கானாவின் தலைமைச் செயலகத்துடன் கூடிய ஒங்கிணைந்த புதிய சட்டப்பேரவைக் கட்டடம் உருவாகவிருக்கிறது என்பதில் நாம் பெருமைகொள்ள வேண்டும்.
இதையும் படிங்க: இந்தியாவை பாராட்டிய பிரிட்டன் இளவரசர் சார்லஸ்!