காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டுவது குறித்து நிபுணர் குழு ஆராய்ந்து அறிக்கை சமர்பிக்க வேண்டும் என தமிழ்நாடு, கர்நாடக மாநில அரசுகளுக்கும் மத்திய அரசுக்கும் தென்மண்டல பசுமை தீர்ப்பாயம் நேற்று உத்தரவிட்டது.
இந்நிலையில், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "கர்நாடக அரசு காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதற்காக ஆரம்பகட்டப் பணிகளான சாலை அமைத்தல், கட்டுமானப் பொருட்களை சேகரித்தல் போன்ற வேலைகள் நடைபெற்று வருவதாக செய்தி வெளியானது.
நாளேட்டுச் செய்தியின் அடிப்படையில் மேகதாது அணை கட்டுவதற்கு கர்நாடக அரசு, வனத் துறை, மத்திய அரசின் சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலைமாற்றம் அமைச்சகத்தின் வனப் பாதுகாப்புச் சட்டம், 2006ஆம் ஆண்டு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு அறிவிக்கை ஆகியவற்றின்படி உரிய அனுமதியினை பெற்றுள்ளதா என்பதை அறிவிப்பதற்காக தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயம் தானாக முன்வந்து அசல் விண்ணப்பம் வழக்கினை விசாரணைக்கு எடுத்துக்கொண்டுள்ளது.
ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்:
மேகதாது அணை குறித்து வெளியான செய்திகளை கருத்தில் கொண்டு, தென் மண்டல பசுமை தீர்ப்பாயம் அறிக்கை சமர்ப்பிக்க ஒரு குழுவை அமைத்துள்ளது. காவிரி நீர் மேலாண்மை ஆணைம், தமிழ்நாட்டின் இசைவு இல்லாமல் மேகதாது திட்டத்திற்கு அனுமதி வழங்கப்படாது என தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், இத்திட்டத்தை, காவிரி நீர் மேலாண்மை ஆணையம் பரிசீலிக்க எடுத்துக்கொள்வதாக தெரியவந்ததையடுத்து, தமிழ்நாடு அரசு தெரிவித்த எதிர்ப்பின் பேரில், அடுத்தடுத்து நடைபெற்றஆணையத்தின் மூன்று கூட்டங்களில் மேகதாது அணை பற்றிய விவாதம் எடுத்துக்கொள்ளப்படவில்லை.
இந்த பிரச்னை குறித்து, தமிழ்நாடு வழக்கறிஞர்களுடன் ஆலோசித்து, உரிய நடவடிக்கை எடுக்கப்படும். காவிரி ஆற்றின் குறுக்கே கர்நாடக அரசு கட்டுவதற்கு உத்தேசித்துள்ள மேகதாது அணை திட்டத்தை தமிழ்நாடு ஒரு போதும் அனுமதிக்காது" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.