சென்னை: குடியரசு தின அணிவகுப்பில் அனைத்து மாநிலங்களின் சார்பில் கலை பண்பாட்டு அலங்கார ஊர்திகள் இடம் பெறுவது வழக்கம். இந்நிலையில் இந்தாண்டு அணிவகுப்பில், தமிழ்நாடு ஊர்தி பங்கேற்க அனுமதி இல்லை என மத்திய அரசு அறிவித்துள்ளது.
வ.உ.சி, வேலு நாச்சியார் உள்ளிட்ட விடுதலைப் போராட்ட வீரர்களை வெளியுலகம் தெரிந்துகொள்ளும் வகையில், அலங்கார ஊர்திகள் தமிழ்நாடு அரசு சார்பில் வழங்கப்பட்டிருந்தது. இதனை மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின்கீழ் செயல்படும் நிபுணர் குழு தேர்வு செய்யாமல் நிராகரித்துள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அதில், 'குடியரசு தின அணிவகுப்பில் தமிழ்நாட்டிலிருந்து நாட்டின் விடுதலைக்காகப் போராடிய வ.உ.சி., மகாகவி பாரதியார், ராணி வேலுநாச்சியார், மருது சகோதரர்கள் ஆகிய விடுதலைப் போராட்ட வீரர்களின் உருவங்கள் அடங்கிய ஊர்தி இடம்பெறுவது மறுக்கப்பட்டு இருப்பது ஏமாற்றம் அளிக்கிறது. எனவே, இதில் பிரதமர் நரேந்திர மோடி உடனே தலையிட்டு விடுதலைப் போராட்ட வரலாற்றில் தமிழ்நாட்டின் பங்களிப்பு இடம்பெறுவதை உறுதிசெய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்' எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதையும் படிங்க: செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தில் முதலமைச்சர் ஆய்வு