சென்னை: முதலமைச்சரின் பணிகள் குறித்து தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்றக் கழகத்தின் மாநில தலைவர் தியாகராஜன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில், "கடந்த அதிமுக ஆட்சியில் நடைப்பெற்ற ஜாக்டோ ஜியோ போராட்டத்தின் போது பழிவாங்கும் நோக்கோடு, காழ்ப்புணர்ச்சியோடு, வஞ்சனையோடு, ஆசிரியர் அரசு ஊழியர்களை ஒடுக்க அவர்களின் கோரிக்கைகளை ஏற்க மறுத்து குறைந்தபட்சம் ஜாக்டோ ஜியோ நிர்வாகிகளை கூட அழைத்து பேச மனமில்லாத அரசாக முந்தைய அரசு செயல்பட்டது.
ஆசிரியர் அரசு ஊழியர்களின் நியமான போராட்டத்தை ஒடுக்கும் விதமாக பல்வேறு அடக்குமுறைகளையும் அச்சுறுத்தல்களையும் செய்ததையும், அதில் ஒரு கட்டமாக ஆசிரியர் அரசு ஊழியர் மீது பொய்யான, புரட்டான வழக்குகள் புனைய பட்டத்தையும் பல்வேறு துறை சார்ந்த குற்ற குறிப்பாணைகளையும் வழங்கியும், தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டதையும், விருப்பமில்லாத கட்டாய பணியிட மாறுதலையும் வழங்கியது.
திமுக வாக்குறுதி
அப்போது, எதிர்கட்சித் தலைவராக இருந்த முதலமைச்சர் ஸ்டாலின் அரசு ஊழியர், ஆசிரியர் நியமான போராட்டத்தை உணர்ந்து, அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும். ஆசிரியர், அரசு ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுப்பதை கைவிட வேண்டும் என்று அறிக்கை வெளியிட்டார்.
மேலும், ஆசிரியர், அரசு ஊழியர்கள் கவலைப்பட வேண்டாம். திமுக ஆட்சி அமைந்த உடன் இந்த ஆட்சியில் எடுக்கப்பட்ட அனைத்து நடவடிக்கைளும் ரத்து செய்யப்படும் மற்றும் உங்கள் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் என வாக்குறுதி அளித்தார்.
அதன் தொடர்ச்சியாக ஸ்டாலின் முதலமைச்சராகப் பதவியேற்ற சில நாள்களிலேயே ஜாக்டோ ஜியோ போராட்டத்தின் போது எடுக்கப்பட்ட அனைத்து நடவடிக்கைகளையும் ரத்து செய்ய நடவடிக்கை மேற்கொண்டார். இந்த அறிவிப்பு ஆசிரியர் அரசு ஊழியர் மத்தியில் மகிழ்ச்சியையும் மனநிறைவையும் தந்துள்ளது.
வாக்குறுதி நிறைவேற்றம்
முதலமைச்சரின் அறிவிப்பைத் தொடர்ந்து பள்ளிக்கல்வி துறை ஆணையர் நேற்று (ஜூலை 2) ஜாக்டோ ஜியோ போராட்டத்தின் போது ஆசிரியர்கள் மீது எடுக்க பட்ட அனைத்து நடவடிக்கைகளும் ரத்து செய்ய ஆணையிட்டுள்ளார். தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் இந்த அறிவிப்பை மனதார வரவேற்கிறது.
இதற்காக தமிழ்நாடு முதலமைச்சருக்கும், உயர்கல்வித் துறை அமைச்சர்களுக்கும், பள்ளிக்கல்வித் தறை அமைச்சர்களுக்கும் தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
மேலும், ஜாக்டோ ஜியோ போராட்டத்தின் போது வழங்கப்பட்ட கட்டாய பணியிட மாறுதலை ரத்து செய்து மீண்டும் பழைய இடத்திலேயே பணிபுரிய முதலமைச்சர் வழி வகை செய்ய வேண்டுகிறோம்" என்று தெரிவித்துள்ளார்.