டாஸ்மாக் மதுபான கடைகளைத் திறக்க தமிழ்நாடு அரசு பிறப்பித்த உத்தரவை எதிர்த்து, வழக்குரைஞர் ராஜேஷ் உள்ளிட்டோர் தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், நிபந்தனைகள் விதித்து மதுவிற்க அனுமதித்து உத்தரவிட்டது.
ஆனால், நிபந்தனைகள் மீறப்பட்டதாகத் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், மே 9ஆம் தேதிமுதல் தமிழ்நாடு முழுவதும் டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிட்டது. ஆன்லைன் மூலமாக மதுவிற்க நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது
சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து தமிழ்நாடு அரசு, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ள நிலையில், ஆன்லைன் மதுவிற்பனைக்கு தடைவிதிக்கக்கோரி, மதுரை நுகர்வோர் அமைப்பு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது.
இந்த வழக்கை நீதிபதிகள் வினீத் கோத்தாரி, நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா அடங்கிய அமர்வு காணொலி வாயிலாக விசாரணை நடத்தியது.
அப்போது, டாஸ்மாக் கடைகளை மூட பிறப்பித்த உத்தரவை எதிர்த்து அரசுத் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளதால், அதன் முடிவைப் பொறுத்து இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் எனக்கூறி வழக்கு விசாரணையை மே 14ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.