சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டம் நாளை (மே 11) கூடுகிறது. திமுக தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பின் கூடும் முதல் கூட்டம் என்பதால், இதில் அனைத்து எம்எல்ஏக்களும் பதவியேற்றுக் கொள்கின்றனர்.
தற்காலிக சபாநாயகராக இன்று (மே 10) பொறுப்பேற்றுக் கொண்ட திருவண்ணாமலை கீழ்பெண்ணாத்தூர் சட்டப்பேரவை உறுப்பினர் கு.பிச்சாண்டி புதிய எம்எல்ஏக்களுக்கு நாளை பதவிப்பிரமாணமும், ரகசிய காப்பு உறுதிமொழியும் செய்து வைக்கிறார்.
இந்நிலையில் நாளை மறுநாள் (மே 12) நடைபெறவுள்ள சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகர் பதவிக்கான தேர்தலில் முறையே திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் சட்டப்பேரவை உறுப்பினர் மு.அப்பாவு அவர்களும், கு.பிச்சாண்டி அவர்களும் போட்டியிடுவதாக திமுக தலைமை கழகம் அறிவித்துள்ளது.
சட்டப்பேரவைத் தலைவராக போட்டியிடும் அப்பாவு
இரண்டு முறை சுயேட்சையாக திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் தொகுதியில் போட்டியிட்டு மு.அப்பாவு வெற்றி பெற்றுள்ளார். கடந்த 2016ஆம் ஆண்டு தேர்தலின்போது, ராதாபுரம் தொகுதியில் போட்டியிட்டு 49 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளர் ஐ.எஸ். இன்பதுரையிடம் அப்பாவு தோல்வியுற்றார். அந்த தேர்தலின் தபால் வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு நடந்ததாக, அப்பாவு தொடர்ந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் தற்போதும் நிலுவையில் இருக்கிறது என்பது கூடுதல் தகவல்.
திருநெல்வேலி, தென்காசி மாவட்டத்தில் இருந்து யாருக்கும் அமைச்சர் பதவி தரப்படவில்லை என்ற குமுறல் திமுகவில் எழுந்ததையடுத்து, அதை போக்கும் விதமாக சபாநாயகர் பதவியை தென் மாவட்டமான திருநெல்வேலிக்கு வழங்கியிருக்கிறது திமுக. அரசியலில் நீண்டகால அனுபவம் கொண்ட அப்பாவு, சபாநாயகராக தமிழ்நாடு சட்டப்பேரவையை வழிநடத்த இருக்கிறார்.