சென்னை: தமிழ்நாட்டில் காட்டு யானைகள் வேட்டையாடப்படுவது தொடர்பான வழக்குகளை விசாரிக்க, சென்னை உயர்நீதிமன்றம் சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்து, இந்த குழுவில் கேரள மாநிலத்தை சேர்ந்த அலுவலர்களை சேர்க்கவும், இதுகுறித்து அம்மாநில அரசு விளக்கமளிக்கவும் உத்தரவிட்டது. இதுதொடர்பான வழக்கு இன்று(பிப்.28) நீதிபதிகள் பாரதிதாசன், சதீஷ்குமார் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது கேரள வனத்துறை சார்பில், மலையாட்டூரில் 18 காட்டு யானைகள் வேட்டையாடப்பட்டது.
இதுகுறித்து விசாரணை நடத்த பெரியார் புலிகள் சரணாலய அலுவலரை நியமிக்க உள்ளதாகவும், மற்ற மாநில அரசுகள் முன்வந்தால் அலுவலர்களை ஒன்றிணைப்பது குறித்து தெரிவிப்பதாகவும் கூறப்பட்டது. இதனைகேட்ட நீதிபதிகள், இதனை மனுவாக தாக்கல் செய்ய அறிவுறுத்தினர்.
அத்துடன் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா மாநில அரசுகள் ஒருங்கிணைந்து செயல்பட்டால் மட்டுமே யானை வேட்டையை தடுக்க முடியும் என்று தெரிவித்தனர். இறுதியாக கேரளாவில் உள்ள விலங்குகள் வேட்டை தொடர்பான முக்கிய வழக்குகளை, மாநில அரசின் ஒப்புதலைப் பெற்று சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு உட்படுத்தலாம் என்று தெரிவித்து வழக்கை மார்ச் 18ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
இதையும் படிங்க: விவசாயத் தோட்டத்துக்குள் புகுந்து காரை சேதப்படுத்திய யானைகள்