தமிழ்நாட்டில் இருந்து ரஷ்யா, சீனா, பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட நாடுகளில், பல மாணவர்கள் மருத்துவப் படிப்புகளை படித்து வருகின்றனர். அங்கு படிப்பு முடிந்து வரும் தமிழ்நாடு மாணவர்கள் இந்தியாவில் நடைபெறும் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.
பின்னர் மருத்துவ கவுன்சில் மூலம் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ளிருப்பு பயிற்சி மேற்கொள்ள வேண்டும்.
அவ்வாறு பயிற்சி முடித்த மாணவர்கள் மருத்துவராகப் பதிவு செய்து, அடையாள அட்டை வழங்கப்படும். தற்பொழுது கரோனா பெருந்தொற்று பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், மருத்துவர்களுக்கு பற்றாக்குறை ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டுவருகிறது.
வெளிநாடுகள், வெளிமாநிலங்கள், தனியார் மருத்துவக்கல்லூரிகளில் இளநிலை மருத்துவப் படிப்பினை முடித்தவர்கள் ஒராண்டு உள்ளிருப்பு பயிற்சி பெறுவதற்கு அனுமதி அளிக்கப்படாமல் இருந்தது.
இந்தநிலையில் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அரசாணையில், 'வெளிநாடுகள், வெளிமாநிலங்கள், தனியார் மருத்துவக் கல்லூரிகளில் இளநிலை மருத்துவம் படித்த மாணவர்கள் தமிழ்நாட்டில் உள்ளிருப்பு மருத்துவப் பயிற்சி மேற்கொள்வதற்குரிய கட்டணத்தைப் பின்னர் செலுத்தலாம். தற்போது நிலவி வரும் கரோனா தொற்று பாதிப்பினைக் கருத்தில் கொண்டு, இச்சலுகை வழங்கப்பட்டுள்ளது. வழக்கம்போல் உள்ளிருப்பு மருத்துவப் பயிற்சி பெறுவதற்குத் தடையின்மை சான்றிதழ் பெற வேண்டும்.
கரோனா தொற்றின் தாக்கத்தைக் கருத்தில் கொண்டு, இந்த ஒரு முறை மட்டும் உள்ளிருப்பு பயிற்சி மருத்துவம் பெறுவதற்கு சலுகை வழங்கப்பட்டுள்ளது.
மேலும் ஏற்கனவே அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் பயிற்சி மருத்துவம் பயில்வதற்கு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான மாணவர்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டிருந்தது. தற்போது அந்த அனுமதியிலும் சலுகை வழங்கப்படுகிறது என்று அதில் குறிப்பிட்டுள்ளார்.