மின்சார வாரியத்தில் தனியார் துறையை புகுத்துவதன் மூலம் படித்த இளைஞர்களின் வேலை வாய்ப்பு பறிபோகும் என தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் பொதுச்செயலாளர் ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் புதிதாக பதவியேற்ற மேலாண்மை இயக்குநர் ஐந்து துணை மின் நிலையங்களை தனியாருக்கு அளிப்பதற்கு அனுமதி வழங்கியிருந்தார். சேவைத்துறையாக இருக்கக் கூடிய மின்துறை படிப்படியாக தனியார் மயமாக்குவதை எதிர்த்தோம்.
தனியார் மூலம் பணியாளர்களை நியமிக்க அனுமதி
தமிழ்நாடு மின்சார வாரிய தலைவரை பார்த்த பொழுது இதுகுறித்து எடுத்துக் கூறினோம். ஆனால் தற்போது எங்களுக்கெல்லாம் அதிர்ச்சி அளிக்கும் வகையில் மின்சாரத்துறையில் உபகோட்டம் பிரிவில் 50 விழுக்காடு காலியாக உள்ள இடங்களில் தனியார் மூலம் பணியாளர்களை நியமிக்க மூன்று ஆண்டிற்கு அனுமதி வழங்கியுள்ளார்.
ஏற்கனவே மின்சார வாரியத்தில் சுமார் 30 ஆயிரம் பணியிடங்கள் காலியாக உள்ளன. கேங்மேன் பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட்டு தயார் நிலையில் உள்ளனர். படித்து வேலையில்லாமல் இருக்கும் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை வழங்குவதற்கு பதிலாகவும், ஏற்கனவே ஒப்பந்த தொழிலாளர்களாக உள்ளவர்களுக்கு நிரந்தரம் செய்வதற்கு பதிலாக உபகோட்டம் அளவில் தனியார் துறை மூலம் பணியாளர்களை நியமிக்க அனுமதி வழங்கியுள்ளனர்.
கொல்லைப்புறமாக தனியார் துறையை புகுத்தும் தமிழ்நாடு அரசு
மத்திய மின்சார திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் தமிழ்நாடு அரசு, கொல்லைப்புறமாக தனியார் துறையை புகுத்தி வருகிறது. மின்துறை தனியார் மயமாகாது என கூறி வரும் அரசு மத்திய அரசுடன் இணைந்து மறைமுகமாக தனியார் மயமாக்க செயல்பட்டு வருகிறது. மின்சாரத் துறை அமைச்சருக்கு தெரியாமல் மின் வாரிய தலைவர் இதனை செயல்படுத்த முடியாது.
மறைமுகமாக தனியார்மயம் ஆக்குவதற்கு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது என தொழிற்சங்கங்கள் குற்றஞ்சாட்டுகிறோம். இந்த உத்தரவை திரும்பப் பெற மின் வாரிய தலைவருக்கு அரசு அறிவுரை வழங்க வேண்டும். தனியார் மயமாக்கப்படுவதால் படித்த பட்டதாரி இளைஞர்கள் வேலைவாய்ப்பை இழக்கும் நிலை ஏற்படும் என தெரிவித்தார்.
இதையும் படிங்க: 234 தொகுதிகளிலும் தனித்து போட்டி - சீமான் திட்டவட்டம்!