கரந்தைத் தமிழ்ச் செம்மல் ச.இராமநாதன் வயது மூப்பு காரணமாக நேற்று (மார்ச் 5) காலமானார். அவருக்கு வயது 82. அவரின் மறைவிற்கு முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார்.
அதில், "கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் முன்னாள் செயலாளரும், தற்போதைய தலைவருமான, கரந்தைத் தமிழ்ச் செம்மல் ச.இராமநாதன் வயது மூப்பு காரணமாக மறைவெய்தினார் என்ற செய்தியறிந்து துயருற்றேன்.
ஈடில்லா இழப்பு
பல்வேறு கல்வி நிலையங்களை நிறுவிய அவர், 1983ஆம் ஆண்டு முதல் 1997ஆம் ஆண்டு வரை, கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் தலைவராகவும், 2000ஆம் ஆண்டு முதல் 2021ஆம் ஆண்டுவரை செயலாளராகவும் பணியாற்றியவர். பின்னர், 2021ஆம் ஆண்டு முதல் மீண்டும் தலைவராகப் பணியாற்றத் தொடங்கிய அவர், கரந்தைத் தமிழ்ச் செம்மல், செயல் மாமணி, செம்மொழி வேளிர் முதலிய விருதுகளைப் பெற்றவர்.
ஈடு செய்ய முடியாத அவரது இழப்பால் வாடும் அவரது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் தமிழ் ஆர்வலர்களுக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று கூறியுள்ளார்.
இதையும் படிங்க: 'மகளிருக்கு தனிக் கழிப்பறை' - சு.வெங்கடேசனின் கோரிக்கையை ஏற்ற எஸ்பிஐ வங்கி