சென்னை: இயற்கைப் பேரிடர் காரணமாகப் பாதிக்கப்பட்டுள்ள, 'கேரள உறவுகளுக்கு உதவிட முன்வாருங்கள்' என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில், "இயற்கை அழகு கொஞ்சும் இறைவனின் தாயகமாக போற்றப்படும் கேரள மாநிலத்தில், இயற்கை சீற்றத்தின் காரணமாக, கடும் வெள்ளமும் தொற்று நோய் அபாயமும் ஏற்பட்டுள்ளது.
தொடர்ந்து பெய்து வரும் கன மழையினால், நீர் நிலைகள் நிரம்பி வழிவதால், ஏற்பட்ட பெரும் வெள்ளம் காரணமாக, உணவுப் பற்றாக்குறையும், அத்தியாவசியப் பொருட்களுக்கான தட்டுப்பாடும் அவசியமான மருந்துப் பொருட்களுக்கான தட்டுப்பாடும் நிலவி வருகிறது.
நம் தேசியத் தலைவர்களின் வழிகாட்டுதலின்படி, பேரிடர் காலங்களிலும், கொள்ளை நோய் காலங்களிலும் நமது பாஜக தொண்டர்கள், தன்னார்வலர்கள் ஆக தன்னலமற்ற சேவைகள் மூலம் மக்களுக்குப் பாதுகாப்பு அரணாக நின்றிருக்கிறார்கள்.
அதுபோல, மீண்டும் ஒரு முறை நம் கேரளத்தின் சகோதர சகோதரிகளுக்காக, பதப்படுத்தப்பட்ட உணவுப்பொருட்கள், ரொட்டி, பால் பவுடர், பிஸ்கட்டுகள் போன்ற உணவு வகைகளையும், ஆடைகள், கம்பளி, போர்வைகள் போன்ற துணி வகைகளையும், அத்தியாவசியமான மருந்துப்பொருட்கள் முதல் உதவிப் பொருட்கள், நாப்கின்கள் போன்ற மருத்துவப் பொருட்களையும்; நம் கேரள மாநில உறவுகளுக்காக அனைவரும் தாராளமாக வழங்கி உதவி செய்ய வேண்டும் என்று உடன் வேண்டுகிறேன்.
ஆகவே, தமிழ்நாடு மக்களும், குறிப்பாக பாஜக தொண்டர்களும் பெருவாரியான உதவிகளை செய்ய முன்வர வேண்டும் என்று அன்புடன் வேண்டுகோள் விடுக்கிறேன்.
பாஜகவின் அந்தந்த மாவட்ட தலைமை அலுவலகம் உங்களை எல்லாம் ஒன்றுதிரட்டி, அவற்றையெல்லாம் கோயம்புத்தூர் மற்றும் தேனி மாவட்ட அலுவலகத்திற்கு அனுப்பி வைக்குமாறு அன்புடன் வேண்டுகிறேன்" என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதையும் படிங்க: எலும்பு மெலிதல் நோய் தினம்: ஏன், எதனால், என்ன செய்யலாம்?