தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் குரூப் 2 பணிகளில் நேர்முகத் தேர்வு, நேர்முகத் தேர்வு அல்லாத பணிகளுக்கான புதிய பாடத்திட்டத்தினை வெளியிட்டுள்ளது.
அதன்படி குரூப்-2 தேர்வில் முதல் நிலை தேர்வு (கொள்குறி வகை) பட்டப்படிப்பு தரத்தில், பொது அறிவில் 175 கேள்விகள், தேர்வர்களின் திறனறிவு, மனக்கணக்கு, நுண்ணறிவு ஆகியவற்றில் 25 கேள்விகள் பத்தாம் வகுப்பு பாடத்திட்டத்தில் கேட்கப்படும். சுமார் மூன்று மணி நேரம் நடைபெறும் இந்தத் தேர்வில் 300 மதிப்பெண்கள் அளிக்கப்படும். அதில் குறைந்தபட்சம் 90 மதிப்பெண்கள் பெற வேண்டும்.
அதேபோல் குரூப்-2 முதன்மை எழுத்துத் தேர்வுக்கான பாடத்திட்டங்கள் பட்டப்படிப்பு தரத்தில் மூன்று மணிநேரம் 300 மதிப்பெண்களுக்கு நடத்தப்படும். அவற்றில் பகுதி 'அ'வில் தமிழிலிருந்து ஆங்கிலத்திற்கு மொழிபெயர்த்தல், ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மொழி பெயர்த்தல் ஆகியவற்றில் நான்கு கேள்விகள் கேட்கப்படும். நூறு மதிப்பெண்களுக்கான இந்தப் பகுதியில் குறைந்தபட்சம் 25 மதிப்பெண்கள் தேர்வர்கள் பெற்றாக வேண்டும். அதில் முக்கியமாக பகுதி 'அ'வில் குறைந்தபட்ச மதிப்பெண் பெறாத தேர்வர்களின் விடைத்தாள் மதிப்பீடு செய்யப்படாது.
அதேபோல் பகுதி 'ஆ'வில் சுருக்கி எழுதுதல், பொருள் உணர்திறன், சுருக்க குறிப்பிலிருந்து விரிவாக்கம் செய்தல், திருக்குறள் தொடர்பான கட்டுரை வரைதல், அலுவல் சார்ந்த கடிதம் வரைதல் ஆகியவற்றிற்கு 200 மதிப்பெண்கள் அளிக்கப்படும். இந்தப் பகுதி முழுவதும் தமிழ் அல்லது ஆங்கிலத்தில் மட்டும் விடை அளிக்க வேண்டும். குரூப்-2 தேர்வில் தமிழ் தெரியாதவர்கள் தமிழ்நாட்டில் பணியில் சேர முடியும் என்ற இந்நிலை இனிமேல் வராது. காரணம் முதன்மை தேர்வில் தேர்வுக்கு தமிழில் எழுதவும் படிக்கவும் தெரிந்திருந்தால் மட்டுமே அவர்களால் பகுதி 'அ ' விடையளிக்க முடியும்.
பிற மாநிலத்திலிருந்து வரும் தேர்வர்கள் தமிழில் எழுதுவதற்கும் படிப்பதற்கும் நன்கு தெரிந்திருக்க வேண்டும். அவ்வாறு தெரியாமல் தமிழிலிருந்து ஆங்கிலத்திற்கு மொழிபெயர்க்கவும், ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மொழி பெயர்க்கவும் முடியாது. இதனால் தமிழ்நாட்டில் தமிழ் படிக்காமல் பிற மொழியை மொழிப்பாடமாகத் தேர்வு செய்து படிக்கும் மாணவர்களும் குரூப்-2 பணியில் சேருவது கடினமாகவே அமையும்.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள புதிய பாடத்திட்டத்தில் கிராமப்புறத்திலிருந்து தேர்வு எழுத விரும்பும் மாணவர்கள் முதன்மைத் தேர்வுக்கு என தனியாக எந்தவித பயிற்சியும் மேற்கொள்ளவேண்டிய தேவைப்படாத வகையில் பாடத்திட்டம் அமைக்கப்பட்டுள்ளது.
மேலும் முக்கியமாக நேர்முகத்தேர்வு பதவிகளுக்கு முதன்மை எழுத்துத்தேர்வு 300 மதிப்பெண், நேர்முகத்தேர்வு 40 மதிப்பெண் என 340 மதிப்பெண்களில் குறைந்தபட்சம் அனைத்து வகுப்பினரும் 102 மதிப்பெண்கள் பெற வேண்டும். நேர்முகத்தேர்வு அல்லாத பள்ளிகளுக்கு முதன்மை எழுத்துத் தேர்வு நடத்தப்படும் 100 மதிப்பெண்களில் அனைத்து வகுப்பினரும் குறைந்தபட்சம் 90 மதிப்பெண்கள் பெற வேண்டும் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
குரூப் 2 தேர்வில் முதல்நிலைத் தேர்வில் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாணவர்கள் தேர்விற்கான விடைகளை எழுத முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.