சென்னை: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக கூட்டணியிலிருந்து விலகிய நிலையில் பாஜக தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்தது.
இதையடுத்து புதிதாக உருவாக்கப்பட்டுள்ள தாம்பரம் மாநகராட்சிப் பகுதியில் உள்ள 70 வார்டுகளிலும் போட்டியிட வேட்பாளர்களைத் தேர்ந்தெடுக்கும் பணியில் மாவட்டத் தலைவர் செம்பாக்கம் வேதா சுப்பிரமணியம் கடந்த இரு நாள்களாக ஈடுபட்டுவந்தார்.
நேற்று (பிப்ரவரி 2) பாஜக சார்பில் தாம்பரம் மாநகராட்சியில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டம் நடைபெற்றது. இதில் தாம்பரம் மாநகராட்சியில் உள்ள 70 வார்டுகளிலும் போட்டியிட வேட்பாளர்களை அறிமுகம் செய்துவைத்தனர். ஏற்கனவே தேமுதிக, பாமக தனித்தனியாகப் போட்டியிடும் நிலையில் தற்போது பாஜகவும் 70 வார்டுகளிலும் தனித்து களமிறங்கியது.
நிகழ்ச்சிக்குப் பின் செய்தியாளரிடம் பேசிய செங்கல்பட்டு மாவட்டத் தலைவர் வேதா சுப்பிரமணியம் கூறுகையில், ”புதிதாக உருவாக்கப்பட்டுள்ள தாம்பரம் மாநகராட்சியில் பல்வேறு திட்டங்களைப் பெற்றுத்தர பாஜக சார்பில் தாமரை நாயகர்களையும், நாயகிகளையும் களமிறக்கி அறிமுகம் செய்யப்பட்டுள்ளனர்.
தாம்பரம் மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் பல்வேறு வளர்ச்சிகளைப் பெறவும், தாம்பரம் ரயில் நிலையத்தை மூன்றாவது முனையமாகச் சிறப்பு பெறவும், அடிப்படை உரிமைகளையும் பெற்றுத் தர துடிப்புமிக்க பாஜக வேட்பாளர்களுக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும்.
அதுமட்டுமில்லாமல் தாம்பரம் மாநகராட்சியில் உள்ள 70 வார்டுகளில் ஆண்களுக்கு 35 வார்டுகளும், பெண்களுக்கு 35 வார்டுகளும் சரிசமமாக ஒதுக்கப்பட்டுள்ளன. தேர்தல் முடிவுகள் அனைவரும் எதிர்பார்ப்பதுபோல நிச்சயமாக மாற்றத்தை ஏற்படுத்தும்” எனக் கூறினார்.
இதையும் படிங்க: உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெறும் - ஆர்.பி. உதயகுமார்