சென்னை: தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், நேற்று (ஏப்ரல் 7), உலக அளவில் காலணிகள் உற்பத்தியில் முன்னிலை வகிக்கும் தைவான் நாட்டைச் சேர்ந்த ஹாங் ஃபூ (Hong Fu) தொழில் குழுமத்துடன் , தமிழ்நாட்டில் தொழில் தொடங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையொப்பமிடப்பட்டது.
இதன் மூலம், அடுத்த 3 முதல் 5 ஆண்டுகளில், படிப்படியாக 1,000 கோடி ரூபாய் வரை முதலீடு மற்றும் 20,000 நபர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கப்படும். இத்தொழில் திட்டத்தின் மூலம் பெண்களுக்கு அதிக வேலை வாய்ப்பு அளிக்கப்படும். இந்த முதலீடு தமிழ்நாட்டில் காலணிகள் உற்பத்தி மற்றும் ஏற்றுமதிக்கு பெரும் ஊக்கத்தை அளிக்கும்.
தைவான் நாட்டைச் சேர்ந்த ஹாங் ஃபூ தொழில் குழுமம், விளையாட்டு காலணிகளை வடிவமைத்தல், மேம்படுத்துதல், தயாரித்தல் மற்றும் விற்பனை செய்தல் ஆகிய செயல்பாடுகளை 2003 ஆம் ஆண்டு முதல் மேற்கொண்டு வருகிறது. இந்நிறுவனம், உலக அளவில் விளையாட்டு காலணிகள் முன்னணி விற்பனையாளர்களான நைக் (Nike), பூமா (Puma), கான்வர்ஸ் (Converse), வேன்ஸ் (Vans) போன்ற பல்வேறு புகழ்பெற்ற நிறுவனங்களுக்கு காலணிகளை தயாரித்து வழங்கி வருகின்றது. இந்நிறுவனம் தமிழ்நாட்டில் தொழில் தொடங்குவதற்கான இடம் தேர்வு செய்யும் பணி நடைபெற்று வருகிறது. இடம் தேர்வு செய்யப்பட்ட பிறகு, விரைவில் தொழிற்சாலை தொடங்கும் பணிகள் நடைபெறும்" இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: இலங்கைத் தமிழர்களுக்கு உதவத் தயார்': மத்திய வெளியுறவுத்துறை அமைச்சருடன் போனில் பேசிய முதலமைச்சர்