சென்னை பொதிகை தொலைக்காட்சி நிலையத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பில், சென்னை பத்திரிகை தகவல் அலுவலகத்தின் கூடுதல் தலைமை இயக்குநர் அண்ணாதுரை, சென்னை பொதிகை தொலைக்காட்சி நிலைய தலைவர் கிருஷ்ணதாஸ், செய்தி பிரிவின் இயக்குநர் குருபாபு பலராமன், நிகழ்ச்சி பிரிவின் தலைவர் ரஃபீக் பாட்ஷா ஆகியோர் பங்கேற்று பேசினர்.
அப்போது பேசிய பத்திரிகை தகவல் அலுவலகத்தின் கூடுதல் தலைமை இயக்குநர் அண்ணாதுரை, "வரும் 20ஆம் தேதி முதல் 75 வாரங்களுக்கு இந்த நிகழ்ச்சி தூர்தர்ஷன் பொதிகையில் சனிக்கிழமை தோறும் இரவு 8 மணிக்கு தமிழில் ஹெச்டி தொழில்நுட்பத்தில் ஒளிபரப்பாக உள்ளது.
மொத்தம் 75 வாரங்கள் ஒளிபரப்பாக உள்ள இந்த தொலைக்காட்சி தொடரில் நாடு முழுவதிலும் இருந்து விடுதலை போராட்டத்தில் பங்கேற்ற அறியப்படாத 75 விடுதலை போராட்ட வீரர்களின் வாழ்க்கை வரலாறு ஒளிபரப்பு செய்யப்படள்ளது. தமிழ்நாட்டில் இருந்து பூலித்தேவன், வேலுநாச்சியார், வீரபாண்டிய கட்டபொம்மன் ஆகிய வீரர்களின் வரலாறும் இந்த தொடர்களில் ஒளிபரப்பாக உள்ளது.
சுதந்திரப் போராட்ட வீரர் ஒண்டி வீரன் நினைவு நாளான ஆகஸ்ட் 20ஆம் தேதி அவரது தபால்தலையை வெளியிடும் நிகழ்ச்சி திருநெல்வேலி பாளையங்கோட்டையில் நடைபெறுகிறது இதில் தமிழ்நாடு ஆளுநர் ஆர் என் ரவி தபால்தலையை வெளியிட தெலங்கானா ஆளுநரும், புதுச்சேரி துணை ஆளுநருமான தமிழிசை செளந்தரராஜன் பெற்றுகொள்கிறார்.
இந்த நிகழ்ச்சியில் மத்திய தகவல் தொடர்புதுறை இணை அமைச்சர் தேவுசிங் ஜெய்சிங்பாய் சவுகான், சமூக நீதி மற்றும் அதிகாரம் அளித்தல் துறை இணை அமைச்சர் நாராயணசாமி, தகவல் ஒலிபரப்பு, மீன்வளம், கால்நடை பராமரிப்பு, பால்வளத்துறை இணை அமைச்சர் டாக்டர் எல் முருகன், தமிழ்நாடு சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.
மேலும், பாளையங்கோட்டையில் சென்னை மண்டல மத்திய மக்கள் தொடர்பகத்தின் சார்பில் விடுதலைப் போராட்ட வீரர்கள் குறித்த 10 நாள் புகைப்பட கண்காட்சி நடைபெற உள்ளது" என்றார். இதையடுத்து பேசிய ரஃபீக் பாட்ஷா, "விடுதலைப் போரில் தமிழ்நாடு ஆற்றிய பங்கு குறித்து தனி தொலைக்காட்சித் தொடர் ஒளிபரப்பும் பணிகளில் சென்னை பொதிகை தொலைக்காட்சி நிலையம் ஈடுபட்டு உள்ளது. அது விரைவில் தொடராக வெளிவரும்" என்றார்.
அதன்பின் செய்தி பிரிவின் இயக்குநர் குருபாபு பலராமன் பேசுகையில், "நாடு விடுதலை அடைந்து 75 ஆண்டுகள் நிறைவு பெற்றதை கொண்டாடும் வகையில் பொதிகை தொலைக்காட்சியின் செய்தி பிரிவு சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு திட்டமிடப்பட்டுள்ளன. விடுதலைப் போராட்டம் குறித்தும், வரலாற்று சிறப்பு நிகழ்ச்சிகள் குறித்தும் தூர்தர்ஷனின் யூடியூப் தளத்தில் காணலாம் என்றார்.
இதையும் படிங்க: இரட்டை இலை சின்னத்தை முடக்க கோரிய வழக்கு தள்ளுபடி