தமிழ்நாடு முழுவதும் நடந்த சிலை கடத்தல் தொடர்பான அனைத்து வழக்குகளையும் விசாரிக்க ஐஜி பொன்.மாணிக்கவேல் தலைமையில் தனிப்படை அமைத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனையடுத்து விசாரணையை தொடங்கிய பொன்.மாணிக்கவேல் தஞ்சை பெரிய கோயிலுக்குச் சொந்தமான ராஜராஜ சோழன் மற்றும் அவரது பட்டத்து அரசியான உலகமாதேவியின் ஐம்பொன் சிலைகள் உள்ளிட்ட ஏராளமான சிலைகளை மீட்டார்.
இதனையடுத்து சிலை கடத்தல் தொடர்பான வழக்கு விசாரணையை சிபிஐக்கு மாற்றி தமிழ்நாடு அரசு அரசாணை பிறப்பித்தது. ஆனால் சிலை கடத்தல் வழக்கை சிபிஐக்கு தமிழ்நாடு அரசு பிறப்பித்த ஆணையை எதிர்த்து வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
வழக்கை விசாரித்த நீதிமன்றம், சிலை கடத்தல் வழக்குகளை சிபிஐக்கு மாற்றி தமிழ்நாடு அரசு பிறப்பித்த ஆணையை ரத்து செய்தும், சிலை கடத்தல் தடுப்பு பிரிவின் சிறப்பு அலுவலராக பொன்.மாணிக்கவேல் மேலும் ஒரு ஆண்டுக்கு நீடிப்பார் எனவும் உத்தரவிட்டது.
உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவுக்கு எதிராக தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இதன் மீதான தீர்ப்பு இன்று வெளியாகும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், சிலை கடத்த வழக்குகளை சிறப்பு அதிகாரி பொன். மாணிக்கவேல் விசாரிக்கலாம். ஆனால் அவர் கைது நடவடிக்கைகளில் ஈடுபடக் கூடாது என்றும் உத்தரவிட்டுள்ளது. மேலும், சிலை கடத்தல் வழக்குகளை சிபிஐக்கு மாற்றிய தமிழ்நாட்டு அரசின் ஆணையையும் உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது.