இது குறித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், "மத்திய பாஜக அரசு கொண்டுவந்துள்ள மூன்று வேளாண் சட்டங்களையும், மின்சார சட்டத்தையும் ரத்து செய்யக்கோரி கடந்த நவம்பர் 26ஆம் தேதியிலிருந்து லட்சக்கணக்கான விவசாயிகள் டெல்லியில் அமைதி வழி அறப்போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.
மத்திய அரசின் சார்பில் விவசாயிகளுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகள் தோல்வி அடைந்த நிலையில், போராட்டத்தை மேலும் தீவிரப்படுத்தும் நடவடிக்கைகளில் விவசாயிகள் இறங்கியுள்ளனர்.
இந்தியாவின் முதுகெலும்பாக விளங்கும் விவசாயத் துறையை முற்றிலும் சீர்குலைத்து கோடான கோடி மக்களின் வாழ்வாதாரத்தை கார்பரேட் பெரு நிறுவனங்களுக்கு தாரைவார்த்துக் கொடுப்பதை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் எனப் போராட்டக் களத்தில் விவசாயிகள் உறுதியாக இருக்கின்றனர்.
வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற முடியாது என்று மத்திய பாஜக அரசு தெரிவித்துவரும் நிலையில், டிசம்பர் 14 முதல் ரயில் மறியல் போராட்டம், சாலை மறியல் போராட்டம் என அறப் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்ல விவசாயிகள் அறைகூவல்விடுத்துள்ளனர்.
விவசாயிகளின் டெல்லி முற்றுகைப் போராட்டத்திற்கு ஆதரவாகத் தமிழ்நாட்டில் தொடர் காத்திருப்புப் போராட்டத்தை நடத்துவதற்கு அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக்குழு தீர்மானித்து உள்ளது.
அதன்படி டிசம்பர் 14ஆம் தேதி தேதி ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெறும் தொடர் காத்திருப்புப் போராட்டத்திற்கும், தமிழகமெங்கும் நடைபெறும் போராட்டங்களுக்கும் மதிமுக ஆதரவை வழங்குகிறது.
அனைத்துத் தரப்பு மக்களின் வாழ்வுரிமைக்காக டெல்லியில் விவசாயிகள் போராடுகிறார்கள் என்பதை மனத்தில் கொண்டு விவசாயிகள் போராட்டத்திற்கு தமிழ்நாட்டில் அனைவரும் பேராதரவு வழங்க வேண்டும் என்று வேண்டி கேட்டுக்கொள்கிறேன்.
காத்திருப்புப் போராட்டங்களில் மறுமலர்ச்சி திமுக விவசாய அணி தோழர்கள் அனைவரும் பங்கேற்று கடமையாற்ற வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.