சென்னை: ஐஐடி சார்பில் தேசிய அளவிலான போட்டியெழுத்து தேர்வுகள் மற்றும் ஒலிம்பியாட் போன்றவற்றை எதிர்கொள்வதற்காக ஐந்தாம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்குக் கூடுதலாக கற்கும் வகையில் பாடத்திட்டங்களை வடிவமைத்து இணையதளத்தில் வெளியிட ஆலோசனை செய்து வருவதாக சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி தெரிவித்துள்ளார்.
சென்னை ஐஐடியில் சேர விரும்பும் மாணவர்களுக்கும், ஜெஇஇ தேர்வை எழுதியுள்ள மாணவர்களுக்கும் ஐஐடியில் உள்ள வசதிகள் குறித்து அறிந்து கொள்வதற்காக askiitm.com என்ற இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த இணையதளத்தில் உள்ள பல்வேறு வசதிகள் குறித்தும் ஐஐடியில் விரும்பும் மாணவர்களுக்கு அங்குள்ள வசதிகள் குறித்து மாணவர்களுடன் ஐஐடி இயக்குநர் காமகோடி உரையாடினார்.
மேலும் இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஐஐடி இயக்குநர் காமகோடி, “ஐஐடியில் 2010ஆம் ஆண்டிற்குப் பின்னர் மாணவர் சேர்க்கை ஆன்லைன் மூலம் நடைபெற்று வருகிறது. இதனால் ஐஐடியில் உள்ள வசதிகள் குறித்து மாணவர்களுக்குப் பல்வேறு சந்தேகங்கள் எழுகின்றன. மேலும் பள்ளிப்படிப்பை முடித்துவிட்டு வரும் மாணவர்கள் தங்கள் எதிர்காலத்தை தீர்மானிக்கும் அடுத்த கட்டத்திற்குச் செல்கின்றனர்.
அவர்களுக்கு ஏற்படும் பல்வேறு சந்தேகங்களை தீர்த்து வைக்கும் வகையில் இந்த இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த இணையதளத்தில் ஐஐடியில் உள்ள படிப்பு குறித்தும் அதற்கான வேலைவாய்ப்புகள் குறித்தும் எடுத்துக் கூறப்பட்டுள்ளன.
ஐஐடியில் படிக்கும் மாணவர்கள் ஒரே நேரத்தில், இரண்டு பட்டங்களைப்பெற முடியும் என்பது குறித்தும், எந்தெந்த படிப்பினை படித்தால் வேலை வாய்ப்புகள் உள்ளது என்பது குறித்தும், அடுத்து என்ன படிக்கலாம் என்பது குறித்தும் விளக்கப்பட்டுள்ளது.
தற்பொழுது ஆங்கிலத்தில் வெளியிடப்பட்டுள்ள இந்த இணையதளத்தை வரும் ஆண்டுகளில் தமிழ் உள்ளிட்ட பிற மொழிகளிலும் வெளியிடத் திட்டமிட்டுள்ளோம். www.askiitm.com இணையதளத்தில் பட்டப்படிப்பு முதல் ஆராய்ச்சி படிப்பு வரை அனைத்து தகவல்களும் வெளியிடத் திட்டமிடப்பட்டுள்ளோம். அதுமட்டுமின்றி, எந்தத் துறையில் இருந்தும் விருப்பப்பாடங்களை தேர்வு செய்யும் வசதியும் செய்யப்பட்டுள்ளது.
செப்டம்பர் 11ஆம் தேதி ஜெஇஇ மெயின் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு பன்னிரெண்டாம் தேதி முதல் மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது. பி.டெக் கம்பியூட்டர் அறிவியியல் பிரிவினை மட்டுமே பெரும்பாலான மாணவர்கள் முதலில் தேர்வு செய்கின்றனர். ஆனால், கரோனா காலத்தில் பயோடெக்னாலஜி நமக்குப் பெரிதும் உதவியது. இதுபோன்று பாடப்பிரிவுகள் குறித்தும் மாணவர்களிடம் எடுத்துக்கூற உள்ளோம்.
இளங்கலை பட்டம் படித்தவர்கள் கேட் தேர்வு எழுதி, முதுகலையில் சென்னை ஐஐடியில் சேரலாம். அதற்குரிய பாடத்திட்டம் askiitm.com இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
சென்னை ஐஐடியில் இயற்பியல், வேதியியல், கணக்கு, தாவரவியல் ஆகிய பாடங்களை கற்பிக்கும் பேராசிரியர்களின் உதவியுடன் ஐந்தாம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு தேசிய அளவிலான திறனறிவுப் போட்டித் தேர்வுகள், ஒலிம்பியாட்ஸ் போன்ற போட்டித்தேர்வுகளை எதிர்கொள்ளும் வகையில் பாடத்திட்டங்கள் வடிவமைத்து கொடுக்கத்திட்டமிட்டுள்ளோம்.
இந்தப் பாடத்திட்டங்கள் ஐஐடியின் இளையதளத்தில் வெளியிடப்படும். மாணவர்கள் அதனை படித்துப் போட்டி தேர்வுகளுக்குத் தயாராகலாம். தமிழ்நாடு அரசின் ’நான் முதல்வன்’ திட்டம் மற்றும் உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கான கல்விக்கட்டணத்தை செலுத்தும் திட்டம் ஆகியவற்றை வரவேற்கிறோம். அரசுப்பள்ளிகளில் படித்து ஜேஇஇ முதல்நிலைத் தேர்வில் தகுதி பெற்றுள்ள மாணவர்களுக்கு பிஎஸ்சி டேட்டா சயின்ஸ் பாடப் பிரிவில் சேர்ப்பதற்கு அனுமதி வழங்கியுள்ளோம்”, எனத் தெரிவித்தார்.
சென்னை ஐஐடியில் உள்ள வசதிகள் குறித்து மாணவர்களும் பெற்றோர்களும் நேரடியாக இன்று ஐஐடி இயக்குநர் காமகோடி உள்ளிட்ட அலுவலருடன் கலந்துரையாடினர். அதன் பின்னர் நம்மிடம் பேசிய மாணவி ஸ்ரேயா, 'ஐஐடி குறித்து தகவல்களை அறிந்து கொள்வதற்கு இந்த கூட்டம் தனக்கு பயனுள்ளதாக அமைந்ததாக' தெரிவித்தார்.
இதையும் படிங்க: கல்லூரி, பல்கலைக் கழகங்களில் தமிழ் மொழி பாடம் கட்டாயம்