கூவம் ஆற்றில் திடீரென நீரின் அளவு அதிகரித்ததன் காரணமாக பெருநகர சென்னை மாநகராட்சி, அண்ணா நகர் மண்டலம், வார்டு - 101, 102க்கு உள்பட்ட பகுதிகளில் கரையோரம் வசிக்கும் பொதுமக்களை பாதுகாக்கும் வகையில் மாநகராட்சியின் சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
கொரட்டூர் அணைக்கட்டிலிருந்து நேற்று மாலை 3.00 மணியளவில் உபரிநீர் 3000 கன அடி அளவிற்கு வெளியேற்றப்பட்டதால், கூவம் ஆற்றில் நீரின் ஓட்டம் திடீரென அதிகரித்தது. குறிப்பாக, அண்ணா நகர் மண்டலம், வார்டு-101, 102க்கு உள்பட்ட பாரதிபுரம், கதிரவன் காலனி, மஞ்சக்கொல்லை திருவீதியம்மன் தெரு ஆகிய குடியிருப்புப் பகுதிகளை ஒட்டி கூலம் ஆற்றில் நீரின் மட்டம் அதிகரித்தது.
இதனால் நீர்வள ஆதாரத்துறையின் சார்பில் 500 மணல் மூட்டைகள் உடனடியாகக் கொண்டு வரப்பட்டு கரைகள் பலப்படுத்தப்பட்டன. மேலும் இரண்டு பொக்லைன் இயந்திரங்கள் கொண்டும் கரைகள் பலப்படுத்தப்பட்டன. மாநகராட்சியின் சார்பில் மஞ்சக்கொல்லை நடுநிலைப்பள்ளி, மு.வரதராசனார் மேல்நிலைப்பள்ளி ஆகிய இரண்டு இடங்களில் நிவாரண மையங்கள் உடனடியாகத் திறக்கப்பட்டு பொதுமக்கள் அங்கு பாதுகாப்பாக தங்கும்படி மாநகராட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது.
இன்று (30.11.2021) காலை நிலவரப்படி கூவம் ஆற்றில் நீரின் ஓட்டம் குறைந்து சீராக உள்ளது. இந்தப் பகுதிகளில் மாநகராட்சி அலுவலர்களும், நீர்வளத்துறை அலுவலர்களும் தொடர்ந்து கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
இதையும் படிங்க: Tomato Price hike: தக்காளி லாரிகளுக்கு இடம் ஒதுக்காத அலுவலர்களுக்கு கண்டனம்