நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டுமென தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் பல்வேறு இயக்கங்கள் கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் இந்திய மாணவர் சங்கத்தினர் சார்பாக நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும், இறந்தவர்களின் குடும்பத்திற்கு 50 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளோடு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் மே தின பூங்கா அருகில் போராட்டம் செய்தவர்கள் பிறகு சட்டப்பேரவையை முற்றுகையிட முற்பட்டபோது காவல் துறையினர் அவர்களை தடுத்து வலுக்கட்டாயமாக கைது செய்து காவல் துறை வாகனத்தில் அழைத்துச் சென்றனர்.
இதுகுறித்து எஸ்எஃப்ஐ மாநில செயலாளர் மாரியப்பன் கூறுகையில், ”மத்திய அரசும், அதிமுக அரசும் நீட் தேர்வு எனும் பெயரால் 2017இல் இருந்து 17 மாணவர்களின் உயிரை பறித்துள்ளார்கள். இந்த உயிர் இழப்புக்கு அதிமுக அரசு, பிஜேபி அரசு பொறுப்பேற்க வேண்டும். அதுமட்டுமில்லாமல் சட்டப்பேரவையில் புதிய சட்டத்தை இயற்ற வேண்டும். இத்தேர்வை தொடங்கும்போது பல்வேறு குழப்பங்கள் குறையும் என அரசு தெரிவித்திருந்தது. ஆனால் எதுவும் குறைந்தபாடில்லை உயிரிழப்பு மட்டுமே அதிகரித்து வருகிறது.
மேலும் நீட் தேர்வு பயிற்சி எனும் பெயரால் கோடி கோடியாக கொள்ளை அடித்துக் கொண்டிருக்கிறார்கள். இதற்கு அரசும் துணை போகிறது. நீட் தேர்வு காரணமாக உயிரிழந்த சிலருக்கு மட்டுமே தமிழ்நாடு அரசு நிவாரண நிதி வழங்குகிறது. இதுவரை மொத்தம் 17 மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். அவர்கள் குடும்பத்திற்கு 50 லட்ச ரூபாய், ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும். மேலும் கல்வியை மாநிலப் பட்டியலுக்கு கொண்டு வர வேண்டும்” என்றார்.