காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த செட்டிபபேடு பகுதியில் கரோனா தடுப்பு நடவடிக்கைக்காக சென்னையிலிருந்து அனைத்து மாவட்டங்களுக்கும் செல்லக்கூடிய முக்கிய சாலையான சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சோதனைச் சாவடி அமைக்கப்பட்டுள்ளது. இன்று (ஜூன் 18) இரவு 12 மணி முதல் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படவுள்ளது.
இதனால் கார், ஆட்டோ, இருசக்கர வாகனங்கள் மூலம் சொந்த ஊருக்கு செல்ல சென்னையிலிருந்து ஏராளமானோர் படையெடுத்து வருகின்றனர். இதைத் தடுத்து நிறுத்தும் வகையில் இந்த சோதனைச் சாவடி அமைக்கப்பட்டு காவல்துறையினர் தீவிரமாக வாகனச் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இங்கு இருசக்கர, நான்கு சக்கர, வாகனங்கள், கனரக வாகனங்கள் என பிரித்து தனித்தனியாக வாகனச் சோதனையில் காவல் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
முறையான ஆவணம் மற்றும் இ-பாஸ் வைத்திருக்கின்ற வாகனங்கள் மட்டும் அனுமதிக்கப்படுகின்றன. முறையான ஆவணம் மற்றும் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் பறிமுதல் செய்யப்படுகின்றன. இவ்வாறு இன்று காலையிலிருந்து 60 இருசக்கர வாகனங்களும் மூன்று சொகுசு கார்களும் 12 ஆட்டோக்களும் பறிமுதல் செய்யப்பட்டு பின்னர் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.