சென்னை: அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் சுண்ணாம்பு கல் வெட்டியெடுக்கும் குத்தகைதாரர்களிடம், தண்டத் தீர்வை செலுத்தக் கேட்டு தமிழ்நாடு நோட்டீஸ் அனுப்பியது.
இதனை எதிர்த்து, டெல்லியில் உள்ள ஒன்றிய கனிமவள சீராய்வு ஆணையத்தில், தனியார் சிமெண்ட உற்பத்தியாளர்கள் முறையீட்டு வழக்குத் தொடர்ந்தனர். இந்த வழக்கு, காணொலி வாயிலாக விசாரணைக்கு வந்தது.
அப்போது, ஆணைய அலுவலர்கள், தமிழ்நாடு அரசுத் தரப்பில் முன்னிலையான வழக்கறிஞர் முத்துக்குமாரிடம் இந்தியில் பேசியுள்ளனர். இதற்குக் கடும் எதிர்ப்புத் தெரிவித்த அரசு வழக்கறிஞர், தனக்கு இந்தி தெரியாது என்றும், தனக்கு தமிழ் தெரியும், ஆங்கிலம் தெரிந்தால் பேசுங்கள், தான் பதில் கூறுவதாகத் தெரிவித்தார்.
இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த சீராய்வு ஆணைய அலுவலர்கள் பின்னர் ஆங்கிலத்தில் பேசினர். தமிழ்நாடு அரசு வழக்கறிஞரின் எதிர்ப்பை சற்றும் எதிர்பார்க்காத ஒன்றிய சீராய்வு ஆணையத்தின் அலுவலர்களும், வழக்கு விசாரணைக்காக முன்னிலையாகியிருந்த ஒன்றிய கனிமவளத் துறை அலுவலர்களும் கேட்டுத் திகைப்படைந்தனர்.
சமீபகாலமாக, ஒன்றிய அரசுத் துறைகளின் அலுவலர்கள் இந்தியில் தகவல் பரிமாற்றம் செய்வது அதிகரித்த வண்ணம் உள்ளது. அதேநேரத்தில், தமிழ்நாடு அரசும், அரசு அலுவலர்களும் கடுமையாக எதிர்ப்புத் தெரிவிக்க தவறுவதில்லை