தூத்துக்குடியைச் சேர்ந்த வழக்கறிஞர் அதிசய குமார் என்பவர் மாநில மனித உரிமைகள் ஆணையத்திடம் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அதில், ”சாத்தான்குளம் தந்தை, மகன் சித்ரவதை கொலை விவகாரத்தில், காவல் நிலைய சிசிடிவி பதிவுகளை ஒரு நாள் மட்டுமே வைத்திருந்ததாகவும், அதன் பின் அழித்துவிட்டதாகவும் கூறியுள்ளனர். இவ்வழக்கில் முக்கிய ஆதாரமான சிசிடிவி காட்சி பதிவுகளை அழித்த விவகாரம் தொடர்பாக விசாரணையும் நடைபெற்றுவருகிறது.
இதுபோன்று தமிழ்நாடு காவல் நிலையங்களில் பொதுமக்களுக்கு ஏற்படும் மனித உரிமை மீறலைத் தடுக்கவும், காவல் துறையினரைக் கண்காணிக்கவும், சாத்தான்குளம் போன்ற நிகழ்வுகள் இனி நடந்தால் அதற்கு ஆதாரமாக சிசிடிவி பதிவுகளை நீதிமன்றத்தில் அளிக்க, மாநிலம் முழுவதும் உள்ள காவல் நிலையங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட வேண்டும். ஒவ்வொரு மாவட்டத்திற்கும் சிசிடிவி கட்டுப்பாட்டு அறைகள் அமைத்து கண்காணிக்க வேண்டும். சிசிடிவி பதிவுகள் ஓராண்டிற்குப் பாதுகாக்கப்பட வேண்டும் ” எனக் கோரியுள்ளார்.
இந்த மனுவை ஏற்றுக்கொண்ட மாநில மனித உரிமைகள் ஆணையம், இது தொடர்பாக நான்கு வாரங்களில் விரிவான பதிலளிக்க தமிழ்நாடு உள்துறைச் செயலர், டிஜிபிக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதையும் படிங்க: ஆயுதப்படைக் காவலர்களுக்கு மன அழுத்தம் தீர ஆலோசனை!