சென்னை: அரசுத் தேர்வுகள் இயக்ககம் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், "2021-2022ஆம் கல்வியாண்டில் பொதுத் தேர்வுக்கான பள்ளி மாணவரின் பெயர்ப் பட்டியல் தயாரிக்க உயர்நிலை, மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்களும் தங்கள் பள்ளியில் 10, 11ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களின் விவரத்தை 4.1.2022 முதல் 19.1.2022 வரையிலான நாள்களில் இணையதளம் மூலம் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
அத்துடன் தேர்வுக் கட்டணம், மதிப்பெண் பதிவேடு கட்டணத்தினையும் இணையதளம் மூலம் செலுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.
பதிவேற்றத்தில் சிக்கல்; கூடுதல் கால அவகாசம்
இந்த நிலையில், ஒரு சில பள்ளிகளின் மாணவரின் விவரங்களை இணையதளம் மூலம் பதிவேற்றம் செய்வதில் சில சிரமங்கள் ஏற்படுகின்றன.
இதற்காக பத்தாம் வகுப்பு, 11ஆம் வகுப்பு மாணவரின் விவரங்களை இணையதளம் மூலம் பதிவேற்றம் செய்வதற்கும், இணையதளம் மூலம் தேர்வுக் கட்டணத்தினைச் செலுத்துவதற்கும் 20.1.2022 முதல் 31.1.2022 வரையிலான நாள்களில் கூடுதலாகக் கால அவகாசம் வழங்கப்படுகிறது.
10ஆம் வகுப்பு பெயர்ப் பட்டியலுக்கு இறுதி வாய்ப்பு
இதுவே, பத்தாம் வகுப்பு, 11ஆம் வகுப்புப் பொதுத்தேர்வுக்கான பள்ளி மாணவர்களின் பெயர்ப்பட்டியல் தயாரிக்கும் பணிக்காக வழங்கப்படும் கடைசி வாய்ப்பாகும். இதன்பின்னர், இப்பணிக்காக எக்காரணம் கொண்டும் கூடுதல் கால அவகாசம் வழங்கப்பட மாட்டாது.
எனவே, அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களும், தங்களது ஆளுகைக்குள்பட்ட உயர்நிலை, மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள் அனைவரும், பத்தாம் வகுப்பு, 11ஆம் வகுப்புப் பொதுத் தேர்வுக்கான பள்ளி மாணவர்களின் பெயர்ப் பட்டியல் தயாரிக்கும் பணியினை 31.1.2022-க்குள் நிறைவுசெய்வதற்கு உரிய அறிவுரைகளை வழங்க வேண்டும்" எனக் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: நீட் விலக்கு மசோதா குறித்து அமித் ஷா தகவல் - மா. சுப்பிரமணியன் வரவேற்பு