மாநிலத் திட்டக்குழு 2020ஆம் ஆண்டு மாநில வளர்ச்சிக் கொள்கைக்குழுவாக மாற்றப்பட்டது. அதிமுக ஆட்சியின்போது முன்னாள் அமைச்சர் சி. பொன்னையன் இதன் துணைத்தலைவராகப் பணியாற்றினார். ஆட்சி மாற்றம் ஏற்பட்ட நிலையில், நேற்று முன்தினம் (ஜூன் 5) இந்த மாநில வளர்ச்சிக் கொள்கைக்குழு திருத்தியமைக்கப்பட்டது.
அதன்படி, துணைத்தலைவராகப் பேராசிரியர் ஜெ. ஜெயரஞ்சன், முழுநேர உறுப்பினராக ராம. சீனிவாசன், பகுதி நேர உறுப்பினர்களாக மன்னார்குடி சட்டப்பேரவை உறுப்பினர் டி.ஆர்.பி. ராஜா, மருத்துவர் அமலோற்பவநாதன், சித்த மருத்துவர் கு. சிவராமன் உள்ளிட்டோர் நியமிக்கப்பட்டனர்.
இந்நிலையில், மாநில வளர்ச்சிக் கொள்கைக்குழுத் துணைத்தலைவர் ஜெ. ஜெயரஞ்சன், டி.ஆர்.பி. ராஜா உள்ளிட்ட உறுப்பினர்கள் இன்று முதலமைச்சர் ஸ்டாலினை தலைமைச் செயலகத்தில் சந்தித்தனர். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய துணைத்தலைவர் ஜெயரஞ்சன், "முதலமைச்சரை நாங்கள் சந்திக்க வேண்டும். இதைத்தொடர்ந்து அவரது ஆலோசனைகள் பெற்று, நாங்கள் எங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள பணிகள் குறித்து பார்க்க வேண்டும்.
அதன்பின் அரசின் கொள்கைகளை ஆய்வுசெய்ய வேண்டும், துறைகள்தோறும் என்னென்ன செய்யலாம் என்பதை முடிவுசெய்ய வேண்டும். துறை வல்லுநர்களுடன் ஆய்வுசெய்து கொள்கைகளை வகுக்க வேண்டும், குழுவின் முதல் கூட்டம் அனைத்து உறுப்பினர்களும் வந்தபின் முடிவெடுக்கப்படும்.
இந்தச் சூழலில் மக்கள் சார்ந்த வளர்ச்சியே முக்கியம், நடுவில் சில வழுவல்கள் இருந்தன, எனவே அவற்றைச் சீரமைத்து நீண்ட வளர்ச்சியைக் குறிக்கோளாகக் கொண்டுசெயல்பட வேண்டும். அதற்கான பணிகளை நாங்கள் மேற்கொள்வோம்" எனத் தெரிவித்தார்.