நாடு முழுதும் உள்ள கூட்டுறவு வங்கிகளை ரிசர்வ் வங்கியின் கீழ் கொண்டு வருவதற்கு நேற்றைய (ஜூன்24) தினம் மத்திய அமைச்சரவைக் கூட்டம் ஒப்புதல் அளித்தது. இதனைத் தொடர்ந்து, திமுக தலைவர் இத்தகைய செயல்பாடுகள் நாடாளுமன்ற ஜனநாயகத்திற்கு விரோதமானது என கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கரோனா நெருக்கடியைப் பயன்படுத்தி, கூட்டுறவு வங்கிகளை ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டில் கொண்டுவர மக்கள் விரோத அவசரச் சட்டத்தைப் பிறப்பிக்க மத்திய அமைச்சரவை முடிவு எடுத்திருப்பது, நாடாளுமன்ற ஜனநாயகத்திற்கு விரோதமானது.
மாநில உரிமைகளைப் பாதுகாக்கவும் விவசாயப் பெருங்குடி மக்கள் கடன் பெறும் வசதிகள் மற்றும் சலுகைகளைப் பாதுகாத்திடும் வகையிலும், முதலமைச்சர் மத்திய அரசுக்குக் கடுமையான எதிர்ப்பினைத் தெரிவித்து, இந்த அவசரச் சட்டம் பிறப்பிக்கும் முயற்சியை நிறுத்த வேண்டும்.
நேற்றைய தினம் மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ள இந்த முடிவு, மாநில உரிமைகளுக்கு எதிரானது மட்டுமின்றி - கூட்டாட்சித் தத்துவத்தையும், ஜனநாயகக் கோட்பாடுகளையும் கேலி செய்யும் மிகப் பின்னடைவான நடவடிக்கையாகும்.
ஏற்கனவே இதுதொடர்பாக "வங்கிகள் வரன்முறை சட்டத்தில்" திருத்தம் கொண்டுவர, மார்ச் 3ஆம் தேதி மக்களவையில் மசோதா அறிமுகம் செய்யப்பட்டு, அந்த மசோதா விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படாத நிலையில் - கோவிட்-19 சூழலின் நெருக்கடியைப் பயன்படுத்தி, இதுபோன்றதொரு மக்கள் விரோத அவசரச் சட்டத்தைப் பிறப்பிக்க மத்திய அமைச்சரவை முடிவு எடுத்திருப்பது, நாடாளுமன்ற ஜனநாயகத்திற்கே விரோதமானது” என்று தெரிவித்துள்ளார்.