சென்னை: இளம் சுற்றுச்சூழல் செயற்பாட்டாளரான 22 வயதான திஷா ரவிக்கு ஆதரவாக முக ஸ்டாலின் ட்வீட் செய்துள்ளார்.
அதில், “அற்பமான குற்றச்சாட்டுகளைப் புனைந்து திஷா ரவி கைது செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியளிக்கிறது. அரசை விமர்சிப்பவர்களைக் கொடுங்கோல் வழிகளில் அடக்குவது சட்டத்தின் ஆட்சி ஆகாது. இத்தகைய தண்டிக்கும் போக்கைத் தவிர்த்து, இளைஞர்களிடம் இருந்து எழும் எதிர்ப்புக் குரல்களுக்குச் செவிமடுக்கவேண்டும் என்று பா.ஜ.க. அரசைக் கேட்டுக்கொள்கிறேன்” என்று பதிவிட்டிருந்தார்.
விவசாயிகளுக்கு ஆதரவாக டூல்கிட் என்ற இணைய ஆவணத்தைப் பிரபல சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர் கிரேட்டா தன்பர்க் பகிர்ந்திருந்தார். இது தொடர்பான விவகாரத்தில் பெங்களூருவைச் சேர்ந்த 22 வயதான சுற்றுச்சூழல் செயற்பாட்டாளரும், கல்லூரி மாணவியுமான திஷா ரவி நேற்று (பிப். 14) டெல்லி காவல் துறையினரால் கைது செய்யப்பட்டார்.
பெங்களூருவைச் சேர்ந்த கல்லூரி மாணவியான திஷா ரவி, தேச விரோதம், சதிச் செயல் உள்பட பல்வேறு வழக்குகளின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். முன்னதாக, டெல்லி நீதிமன்றத்தில் வழக்கறிஞரின்றி அவர் முன்னிறுத்தப்பட்டு ஐந்து நாள் காவலில் அடைக்கப்பட்டார். பல எதிர்க்கட்சி தலைவர்கள், இந்த கைது நடவடிக்கையைக் கண்டித்துவருகின்றனர்.