சென்னை: அண்ணா பல்கலைக்கழகத்தின் 42ஆவது பட்டமளிப்பு விழாவில் முதன்மை விருந்தினராக பிரதமர் மோடி, கௌரவ விருந்தினராக முதலமைச்சர் ஸ்டாலின், ஆளுநர் ரவி உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பல்வேறு துறைகளில் முதலிடம் பிடித்த 69 மாணவர்களுக்கு பதக்கங்களை வழங்கி கௌரவித்தார். இந்த நிகழ்வில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,
பட்டம் யாருக்காக?: மத்திய கல்வி அமைச்சகம் அண்மையில் வெளியிட்ட தேசிய உயர்கல்வி நிறுவனங்களுக்கான N.I.R.F தரவரிசைப் பட்டியலில் இடம்பெற்றிருக்கக்கூடிய நிறுவனங்களில் மிகப் பெருவாரியானவை தமிழ்நாட்டைச் சேர்ந்தவை என்பது அனைவருக்கும் தெரியும். காஞ்சியில் பிறந்த வள்ளுவன், பேரறிஞர் அண்ணா பெயரில் அமைந்துள்ள பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா இது.
அண்ணா, மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் பேசும்போது சுட்டிக் காட்டியதைச் நான் சுருக்கமாக, உங்களுக்கு எடுத்துக்கூற விரும்புகிறேன், அதை என்னுடைய கடமையாகக் கருதுகிறேன். இந்த பட்டம் யாருக்காக? உங்களுக்காகவா? உங்களுக்காக மட்டுமல்ல, நாட்டுக்காக! பட்டம் பெற்ற நீங்கள்தான் இந்த நாட்டின் திருவிளக்கு.
நாட்டைச் செழிக்கச் செய்யக்கூடிய வல்லுநர்கள் நீங்கள்தான். தமிழ் - உமது முரசம், பண்பாடு - உமது கவசம், அறிவு - உமது படைக்கலன், அறநெறி - உமது வழித்துணை, உறுதியுடன் செல்வீர். ஊக்கமுடன் பணிபுரிவீர், ஏற்றமிகு வெற்றியினை ஈட்டிடுவீர்" என்றார்.
இந்தப் பட்டத்தோடு உங்களது படிப்பு முடிந்துவிடவில்லை. அடுத்த பட்டத்தை நோக்கி உயருங்கள். பட்டங்கள் என்பவை, வேலை வாய்ப்புக்காக மட்டுமல்ல, உங்களது அறிவாற்றலை மேம்படுத்துவதற்காக என்பதையும் நீங்கள் மறந்துவிடக் கூடாது.
தமிழர்களின் தொழில்நுட்பம்: உங்களுக்குப் பட்டம் வழங்கும் விழாவுக்கு இந்திய நாட்டினுடைய பிரதமர் என்ற உயர்ந்த பொறுப்பில் இருக்கக்கூடிய நரேந்திர மோடி முதன்மை விருந்தினராக வருகை தந்துள்ளார்.
இது உங்களுக்கு கிடைத்திருக்கக்கூடிய மிகப்பெரிய பெருமை. 'நான் பட்டம் வாங்கும்போது பிரதமரே வந்திருந்தார்' என்று உங்களது எதிர்காலப் பிள்ளைச் செல்வங்களிடம் பெருமையுடன் சொல்லிக் கொள்ளலாம், இத்தகைய பெருமைகளோடு எதிர்காலத்துக்குள் நீங்கள் நுழைகிறீர்கள்.
தமிழர்கள் எப்போதும் தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்குபவர்கள். கடல்வணிகம், கடற்படை, இரும்பு வார்க்கும் தொழில்நுட்பம், கல்லணை, தஞ்சை பெரிய கோவில் என வரலாற்றில் நிலைத்திருக்கும் பல படைப்புகளைத் தனது தொழில்நுட்ப அறிவால், எல்லோருக்கும் முன்னோடியாகத் தமிழன் படைத்திருக்கிறான். கல்வி என்பதுதான் யாராலும் திருட முடியாத, பறிக்க முடியாத சொத்து.
எல்லோருக்கும் எல்லாம்: அதனால்தான், படிப்புக்கு மட்டும் எத்தகைய தடைக்கல்லும் இருக்கக் கூடாது என்று நினைக்கிறோம். இன்றைய 'திராவிட மாடல்' தமிழ்நாடு அரசானது, கல்விக் கண்ணைத் திறப்பதையே பெரும்பணியாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. திராவிட இயக்கத்தின் முழுமுதல் கொள்கையான சமூகநீதிக்கு அடிப்படை என்பதே கல்விதான்.
அனைவரும் படிக்க வேண்டும், அனைவரும் வேலைவாய்ப்பைப் பெற வேண்டும், எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்பதற்காகவே திராவிட இயக்கம் தோன்றியது. அதற்காகவே சமூகநீதிக் கருத்தியலும் தோன்றியது. இதற்காக ஏராளமான திட்டங்களின் மூலமாக தமிழ்நாட்டில் கல்விப் புரட்சியை நிகழ்த்தி வருகிறோம். படித்து முடித்து வெளியில் வருபவர்களுக்கான வேலை வாய்ப்புகளை உடனுக்குடன் உருவாக்கித் தரும் சூழலை உருவாக்கி வருகிறோம்.
பகுத்தறிவுப் பாதை: உங்களது கனவுகளை மட்டுமல்ல, உங்களது பெற்றோர் கனவுகளையும் நிறைவேற்றுங்கள். உங்களிடம் இருந்து இந்த மாநிலமும், இந்திய நாடும் நிறைய எதிர்பார்க்கிறது. தமிழ்நாட்டின் தலைசிறந்த தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தில் பட்டம் பெற்றிருக்கிறீர்கள். அரசியலைமைப்பு வலியுறுத்தும் அறிவியல் மனப்பான்மையை நீங்கள் வளர்த்துக்கொள்ள வேண்டும்.
பழமைவாதத்தைப் புறந்தள்ளி, புதிய கருத்துகளை ஏற்று, பகுத்தறிவுப் பாதையில் நடைபோட்டால் தான் நீங்கள் பெற்ற பட்டத்திற்குப் பெருமை. இன்றுமுதல் நீங்கள் பட்டதாரிகள் மட்டுமல்ல; உலகெங்கும் வலம்வரப் போகும் இந்தியாவின் - தமிழ்நாட்டின் நல்லெண்ணத் தூதுவர்கள். நம்முடைய திராவிட மாடல் ஆட்சியில் தமிழ்நாட்டில் உயர்கல்வியின் பொற்காலத்தை உருவாக்க தொடர்ந்து அயராது உழைப்போம் என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: அண்ணா பல்கலைகழக பட்டமளிப்பு விழாவில் பிரதமர் மோடி உரை