தமிழ்நாடு திருத்திய நிதிநிலை அறிக்கைக் கூட்டத்தொடர் சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்றுவருகிறது. நாள்தோறும் துறைரீதியான மானியக் கோரிக்கை விவாதங்கள் நடைபெற்றுவருகின்றன. இந்த நிலையில், இன்று (செப்டம்பர் 3) சுற்றுச்சூழல் - காலநிலை மாற்றத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தொடரின் மானியக் கோரிக்கை மீதான விவாதத்திற்குப் பதிலளித்த துறையின் அமைச்சர் வீ. மெய்யநாதன் புதிய அறிவிப்புகளையும் வெளியிட்டார். விவாதத்தின்போது, 'ஹைட்ரோகார்பன் திட்டம் மத்திய அரசு தமிழ்நாட்டில் தொடர்ந்துகொண்டு வந்திருக்கிறது' என வாழ்வுரிமைக் கட்சித் தலைவரும், சட்டப்பேரவை உறுப்பினர் வேல்முருகன் கேள்வி எழுப்பினார்.
இதற்குப் பதிலளித்த வீ. மெய்யநாதன், "ஹைட்ரோகார்பன் திட்டம் அபாயகரமான திட்டம் எனப் பல்வேறு கருத்துகள் வெளிவந்துள்ளன. ஹைட்ரோகார்பன் திட்டத்தை எதிர்த்துப் போராடிய ஒருவன் நான் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
2017இல் திட்டத்தை எதிர்த்துப் போராடியபோது இன்றைய முதலமைச்சர் அன்றைய எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது விவசாயிகளுக்கு ஆறுதல் அளித்து திமுக விவசாயிகளுக்கு ஆதரவாக இருக்கிறது என உறுதியளித்தார். அப்போதே சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டுவருவதற்கு நடவடிக்கை எடுத்தார்.
அந்தத் திட்டத்தை எதிர்த்துப் போராடிய என்னை அதே துறைக்கு அமைச்சராக அமைத்தவர்
முதலமைச்சர். அரியலூரில் 10 ஹைட்ரோகார்பன் கிணறுகள், கதிராமங்கலத்தில் ஐந்து கிணறுகள் என மத்திய அரசின் அனுமதி அளிக்கப்பட்டது. ஆனால் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு மூலம் 15 கிணறுகளுக்கு ஆணையை நிராகரித்தது.
மயிலாடுதுறையில் இரண்டு கிணறுகளுக்கு ஓஎன்ஜிசி மூலம் பணிகளை மேற்கொள்வதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுத்தது. ஆனால் தமிழ்நாடு அரசு அதற்குத் தடைவிதித்தது. இதுபோல் டெல்டா, வெளி மாவட்டங்களை கிணறுகள் அமைக்காமல் இருப்பதற்கு ஆய்வுசெய்வதற்குத் தமிழ்நாடு அரசு குழு அமைத்தது எனத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழ்நாட்டில் உள்ள டெல்டா, மற்ற மாவட்டங்களைக் கண்ணை இமை காப்பதுபோல் நம்முடைய முதலமைச்சர் பாதுகாப்பார். இயற்கையின் பாதுகாவலர் நமது முதலமைச்சர்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: மத்திய அரசை மகிழ்வித்த ஜிஎஸ்டி வரி வசூல்