சட்டப்பேரவையில் பூஜ்ஜிய நேரத்தின்போது பேசிய எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின், அரசு நிகழ்ச்சிக்கு திமுக உறுப்பினர்களை அழைப்பதில்லை என்பது தொடர்பாக உறுப்பினர் ஆஸ்டின் கொண்டுவந்த உரிமை மீறல் நோட்டீஸ் என்ன நிலையில் உள்ளது என்று கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதில் அளித்த சபாநாயகர் தனபால், திமுக உறுப்பினர்கள் அழைக்காமல் நிகழ்ச்சி நடத்தியது தொடர்பாக மாவட்ட அலுவலர்களிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. என்ன விளக்கம் என்பதை பொறுத்து உரிமை மீறல் ஆய்வு செய்து பின்னர் முடிவு எடுக்கப்படும் என தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய ஸ்டாலின் திமுக உறுப்பினர்கள் உள்ள அனைத்து தொகுதியிலும் இதுபோன்றுதான் நடப்பதாக குற்றம்சாட்டினார். அதற்கு பதிலளித்த சபாநாயகர் இந்த விவகாரம் தொடர்பாக மாவட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தி இருப்பதாகவும், வரும் காலங்களில் இது போன்று நடக்காமல் இருக்க வேண்டும் என்றும் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய துணை முதல்வர் பன்னீர்செல்வம், தேனி மாவட்டத்தில் நடந்த பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு திமுக உறுப்பினர்களை தானே அழைத்து பங்குபெற செய்துள்ளதாக தெரிவித்தார்.
அப்போது குறுக்கிட்ட ஸ்டாலின், அரசு நிகழ்ச்சிக்கு அழைப்பு விடுத்தால் கண்டிப்பாக கலந்துகொள்ள வேண்டும் என திமுக உறுப்பினர்கள் அனைவருக்கும் அறிவுறுத்தி இருப்பதாகவும், ஒருசில குறிப்பிட்ட மாவட்டங்களில் வேண்டுமென்றே திட்டமிட்டு அழைப்பதில்லை எனவும் குற்றம்சாட்டினார்.
பின்னர் மின்துறை அமைச்சர் தங்கமணி, ஒக்கி புயல் காலத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தில் 10 நாட்கள் தங்கி பணியாற்றியதாகவும், திமுக காங்கிரஸ் உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுத்து ஒருநாள் மட்டுமே வந்ததாக புகார் தெரிவித்தார். இறுதியாக பேசிய சபாநாயகர் தனபால், வரும் காலங்களில் அரசு விழாக்களுக்கு திமுக சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுக்கப்படும் என்று தெரிவித்தார்.