வரும் சட்டப்பேரவைத் தேர்தலில், சென்னை மயிலாப்பூர் தொகுதியில், மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பாக ஸ்ரீபிரியா போட்டியிடுகிறார். இன்று கிரீன்வேஸ் சாலையில் உள்ள வட்டாச்சியர் அலுவலகத்தில் தனது வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய அவர், "அனைவரின் மனதில் இருக்கும் மாற்றம் தேவை என்ற எண்ணம், எனக்குள்ளும் இருக்கிறது. ஒரு மாற்றம் தேவை என்றால் என்ன மாதிரியான தவறுகள் நடைபெறுகிறது என்பதை ஊடகங்கள் எடுத்துக் காட்ட வேண்டும்.
மநீம மயிலாப்பூர் வேட்பாளர் ஸ்ரீபிரியா பேட்டி குற்றம் சொல்பவர்கள் சொல்லிக் கொண்டுதான் இருப்பார்கள். அவர்களும் கமலை போல மக்களைச் சந்திக்கட்டும். அதை நாங்கள் விமர்சனம் செய்ய மாட்டோம். கமல் ஹாசன் 63 ஆண்டுகளாக மக்களோடுதான் இருக்கிறார். மக்களுக்கும் அவருக்கும் உள்ள உறவு அனைவருக்கும் தெரிந்ததே. நான் பிறந்து வளர்ந்தது எல்லாம் மயிலாப்பூர்தான். மயிலாப்பூரில் இருக்கும் பிரச்னைகள் எனக்கு நன்றாகவே தெரியும். மக்கள் நீதி மய்யத்தில் இருக்கும் அனைவரும் மக்களோடு இணைந்தவர்கள்தான்" எனத் தெரிவித்தார். இவரை எதிர்த்து மயிலாப்பூர் தொகுதியில், திமுக சார்பாக வேணுவும், அதிமுக சார்பாக நட்ராஜூம் போட்டியிடுகின்றனர்.