சென்னை: மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைமை செயலாளராக வைகோவின் மகன் துரை வைகோ நியமிக்கப்பட்டதற்கு எதிராக அக்கட்சிக்குள்ளே எதிர்ப்பு கிளம்பியுள்ளது கண்கூடு.
வாரிசு அரசியலுக்கு எதிராக மதிமுகவை ஆரம்பித்தவரே, தனது வாரிசை பதவியில் அமர வைக்கலாமா? எனப் புயல் கிளப்பியுள்ளது. வைகோ 1964 ஆம் ஆண்டு, பேரறிஞர் அண்ணா முன்னிலையில் சென்னை கோகலே மன்றத்தில் இந்தி எதிர்ப்புக் கருத்தரங்கத்தில் முதன் முதலில் பேசி தனது அரசியல் வாழ்வில் அடி எடுத்து வைத்தார்.
வைகோ கடந்து வந்த பாதை: திராவிட முன்னேற்றக் கழகத்தின் முக்கிய தலைவராக இருந்த வைகோ, சில முன்னணி நிர்வாகிகளுடன் 1993ஆம் ஆண்டு கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து 5க்கும் மேற்பட்ட தொண்டர்கள் தீக்குளித்தது தமிழ்நாடு எங்கும் பரபரப்பை ஏற்படுத்தி அனைவரையும் திரும்பிப் பார்க்கச் செய்தது. அப்போது, கருணாநிதி அவரது மகன் மு.க.ஸ்டாலினை திமுகவில் முன்னிலைப்படுத்துவதாகவும், வாரிசு அரசியலால் தான் புறக்கணிக்கப்படுவதாகவும் கூறி, வைகோ 1994ஆம் ஆண்டு மே 6 ஆம் தேதி மதிமுக என்ற புதிய அரசியல் கட்சியைத் தொடங்கினார்.
பல மேடைகளில் கண்ணீர் மல்க தனக்கு இழைக்கப்பட்ட ‘அநீதிக்கு ’ நியாயம் கேட்டார். ஆனால், தேர்தல் அரசியலில் கட்சி கரைந்தே போனது. மதிமுக, 1996 முதல் 2021 வரை நாடாளுமன்ற மற்றும் சட்டப்பேரவை தேர்தல்களில் அதிமுக, திமுக, பாஜக மற்றும் 2016 ஆம் ஆண்டு மக்கள் நலக்கூட்டணி எனத் தேர்தல்களை சந்தித்து வந்திருக்கிறது.
தற்போது திமுக கூட்டணியில் இணைந்துள்ள, வைகோ மாநிலங்களவை (ராஜ்ய சபா) உறுப்பினராக இருக்கிறார்.
தொண்டர்களின் விருப்பப்படியே துரை வைகோ தேர்வு: வைகோவுக்குக் கடந்த சில ஆண்டுகளாக உடல்நலக் குறைவு ஏற்பட்டதால், அவர் சார்பாக கட்சி நிகழ்ச்சிகள், கட்சி நிர்வாகிகளின் குடும்ப நிகழ்ச்சிகள் ஆகியவற்றில் வைகோவின் மகன் துரை வைகோ பங்கேற்று வருகிறார்.
அத்துடன் கடந்த அக்.20 ஆம் தேதி நடந்த மதிமுக மாவட்ட செயலாளர்கள் மற்றும் உயர் நிலைக்குழு உறுப்பினர்கள் கூட்டத்தில் ரகசிய வாக்கெடுப்பின் மூலம் கட்சியின் தலைமை செயலாளராக தேர்வானார்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, "துரைக்குப் பதவி வழங்கப்பட்டது என்பது வாரிசு அரசியல் இல்லை. ஒருவரைத் திணிப்பதுதான் வாரிசு அரசியல்.
தொண்டர்களின் விருப்பப்படியே அவருக்குப் பதவி வழங்கப்பட்டது. பொதுவாழ்வுக்குத் தேவையான அனைத்துத் தகுதிகளும் அவருக்கு உள்ளது. தொண்டர்களின் விருப்பப்படியே அவர் தேர்வு செய்யப்பட்டார்" என்று விளக்கம் கூறியுள்ளார்.
மாவட்ட செயலாளர்கள் அதிருப்தி: இதனையடுத்து கடந்த மார்ச் 21 ஆம் தேதி மதிமுகவின் சிவகங்கை, திருவள்ளூர், விருதுநகர் மாவட்டச் செயலாளர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் கூடி தனியாக ஆலோசனைக் கூட்டம் நடத்தினர். அதில் "கட்சியில் ஜனநாயகம் என்பது இல்லை. வாரிசு அரசியலை எதிர்த்து கட்சி தொடங்கிவிட்டு, நாமே வாரிசு அரசியலை ஊக்குவிப்பதா" என அதிருப்தி குரல் எழுப்பினர். மேலும் மதிமுகவை, திமுகவுடன் இணைப்பதற்குப் பேரம் நடந்து வருவதாகவும் குற்றம்சாட்டியுள்ளனர்.
தொடர்ச்சியாக, கடந்த மார்ச் 23ஆம் தேதி நடைபெற்ற மதிமுக பொதுக்குழுக் கூட்டத்திற்கு அதிருப்தியில் இருந்த ஒரு சில முக்கிய நிர்வாகிகள் கலந்துகொள்ளவில்லை. இதனால், துரை வைகோவிற்கு உட்கட்சிக்குள்ளேயே எதிர்ப்பு கிளம்பிய நிலையில், மதிமுக பிளவை நோக்கி செல்கிறதா? எனக் கேள்வி எழுந்துள்ளது.
மதிமுக செய்தி தொடர்பாளர் நன்மாறன் கூறுகையில், 'மதிமுகவிற்குள் எந்த சலசலப்பும் இல்லை; துரை வையாபுரிக்குப் பதவி கொடுத்ததால் எந்த பிளவும் இல்லை' என்று கூறியுள்ளார். மேலும் வைகோ, மதிமுகவை திமுகவுடன் சேர்க்க முயற்சிக்கும் தகவல் முற்றிலும் பொய்யானது எனவும் தெரிவித்தார்.
மதிமுகவை திமுகவுடன் இணைக்கும் முயற்சியா? இது குறித்து அரசியல் ஆய்வாளர் அ. மார்க்ஸ் கூறுகையில், 'வாரிசு அரசியல் இந்திய ஜனநாயகத்திற்குக் கிடைத்த சாபக் கேடு. மேலும், ஜனநாயகத்தில் வாரிசு அரசியலுக்கு இடம் இல்லை.
இது வருந்தத்தக்கது' என்று தெரிவித்துள்ளார். அத்துடன் மேலும் அவர், 'மதிமுகவை திமுகவுடன் இணைக்கும் முயற்சியை வைகோ மேற்கொண்டால் கட்சி அழிந்துவிடும். வைகோவின் மகன் துரை வையாபுரிக்கும் அரசியலில் இடம் இல்லாமல் போய்விடும்.
திமுகவில் மதிமுகவை விட வாரிசு அரசியல் தலையோங்கி உள்ளது' என விளக்கியுள்ளார். இதே போல மூத்த பத்திரிகையாளர் பாபு ஜெயக்குமார் கூறுகையில், 'வாரிசு அரசியலைப் பெரிதாகப் பார்க்க வேண்டியது இல்லை.
வைகோ அன்று வாரிசு அரசை எதிர்த்து அரசியல் செய்த சூழ்நிலை வேறு. துரை வைகோவிற்குப் பதவி வழங்கினாலும், தேர்தல் அரசியலில் வெற்றி பெற்றால் மட்டுமே அங்கீகாரம் பெற முடியும். மதிமுகவிற்குள் துரை வைகோவிற்கு எதிர்ப்பு கிளம்புவது இயல்பு தான்.
மதிமுகவை திமுகவுடன் இணைக்கும் முயற்சி என்பது சரியானதாகத் தான் இருக்கும் எனத் தொண்டர்கள் நினைக்கின்றனர். மேலும், புதிதாகப் பொறுப்பேற்றுள்ள துரை வைகோவிற்குப் பல சவால்கள் காத்திருப்பதாகவும், அவர் அரசியலுக்கு புதியவர் என்பதால் மதிமுகவை எப்படி வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்வார் என்பதையும் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்” என்றார்.
இதையும் படிங்க: போக்சோ வழக்குகளை திறம்பட புலனாய்வு செய்ய காவலர்களுக்கு சிறப்புப் பயிற்சி