பொருளாதார ரீதியில் பின்தங்கியவர்களுக்கான 10 விழுக்காடு இடஒதுக்கீடு கொண்டுவந்து மத்திய அரசு சட்டம் இயற்றியது. இந்தச் சட்டத்தின் கீழ், கல்வி மற்றும் வேலைவாய்ப்பில், மேற்குறிப்பிட்ட வகுப்பினருக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டிருந்தது.
அந்த உத்தரவில், "ஆண்டுக்கு 8 லட்சம் ரூபாய்க்குக் குறைவாக வருமானம் உள்ளவர்கள் இந்த சலுகையைப் பெற தகுதியுடையவர்கள். இந்த இடஒதுக்கீடு சலுகையைப் பெற அந்தந்த தாசில்தாரர்களிடமிருந்து வருமானம் மற்றும் சொத்துச் சான்றிதழ்களைச் சமர்பிக்க வேண்டும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்சான்றிதழ்களை வழங்க தாசில்தாரர்களுக்கு அதிகாரம் வழங்கி மத்திய அரசு உத்தரவிட்டது. இந்நிலையில், இந்தச் சான்றிதழ்களைத் தற்போது வழங்க வேண்டாம் என தமிழ்நாடு வருவாய் நிர்வாக ஆணையர், அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் கடந்த ஜூன் நான்காம் தேதி சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரியும், இதற்குத் தடைவிதிக்கக் கோரியும், தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி ரெட்டி நலச் சங்கத்தின் சார்பில் அதன் செயற்குழு உறுப்பினர் கிருபாகரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு இன்று மீண்டும் நீதிபதிகள் சுப்பையா, கிருஷ்ணன் ராமசாமி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழ்நாடு அரசிடம் எந்தவொரு ஆலோசனையும் நடத்தாமலேயே மத்திய அரசு இந்தச் சட்டத்தைக் கொண்டுவந்ததாக அரசுத் தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண் தெரிவித்தார்.
தமிழ்நாட்டில் இச்சட்டத்தை நடைமுறைப்படுத்துவது குறித்து ஆலோசித்து முடிவெடுக்க மூத்த அமைச்சர்களைக் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளாதவும், இந்த விவகாரத்தில் விரைவில் கொள்கை முடிவு எடுக்கப்படும் எனவும் விளக்கமளித்தார்.
இதைப் பதிவுசெய்துகொண்ட நீதிபதிகள், இந்த வழக்கின் விசாரணையை ஜூலை 11ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர். இதே கோரிக்கையுடன் நாகர்கோவிலிலுள்ள பார்வதிபுரத்தைச் சேர்ந்த அகில பாரத பிராமணர் சங்கத்தின் தலைவர் குளத்துமணி என்பவர் தொடர்ந்த வழக்கும் அன்றைய தினத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது.