சென்னை பெருநகரில் வசிக்கும் பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்து அவற்றின் மீது நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் குறைதீர்ப்பு முகாம் நடத்த சென்னை பெருநகர காவல் ஆணையாளர் விசுவநாதன் உத்தரவிட்டுள்ளார்.
அதன்பேரில் சென்னை பெருநகர காவல் கூடுதல் ஆணையாளர்கள் முனைவர் ஆர். தினகரன், பிரேம் ஆனந்த் சின்ஹா ஆகியோர் மேற்பார்வையில் சென்னை பெருநகர காவல் துறையின் நான்கு மண்டல இணை ஆணையாளர்கள், துணை ஆணையாளர்கள், உதவி ஆணையாளர்கள், காவல் ஆய்வாளர் அடங்கிய காவல் குழுவினர் மூலம், வருகிற 21.09.2019 அன்று சென்னையில் நான்கு இடங்களில் பொதுமக்கள் சிறப்பு குறைதீர்ப்பு முகாம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வண்ணாரப்பேட்டை காவல் மாவட்டம், வடக்கு மண்டலத்திற்கு வடக்கு மண்டல இணை ஆணையாளர் கபில்குமார் சி.சராட்கர் தலைமையில் H-5 புது வண்ணாரப்பேட்டை காவல் நிலையத்திற்கு உட்பட்ட சமுதாயக் கூடத்தில் வருகின்ற 21ஆம் தேதி காலை 11 மணிக்கும், மேற்கு மண்டலம் அம்பத்தூர் காவல் மாவட்டத்திற்கு மேற்கு மண்டல இணை ஆணையாளர் தி.பி. விஜயகுமாரி தலைமையில் திருமுல்லைவாயல் சி.டி.எச் சாலையிலுள்ள மங்களம் திருமண மண்டபத்தில் காலை 10.30 மணிக்கும் நடைபெறவுள்ளது.
தெற்கு மண்டலம், புனித தோமையர்மலை மாவட்டத்திற்கு தெற்கு மண்டல இணை ஆணையாளர் சி. மகேஸ்வரி தலைமையில் புனித தோமையர்மலை ஆயுதப்படை மைதானத்திலும், கிழக்கு மண்டலம் திருவல்லிக்கேணி காவல் மாவட்டத்திற்கு கிழக்கு மண்டல இணை ஆணையாளர் ஆர். சுதாகர் தலைமையில் எழும்பூர் மாண்டியத் ரோடு ரெட் க்ராஸ் சொசைட்டியிலும் காலை 11 மணிக்கு நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : வலியால் துடித்த கர்ப்பிணி பெண்: சாலையின் நடுவே பிரசவம் பார்த்த காவலர்