பாலியல் புகாரில் சிக்கிய சிறப்பு டிஜிபியை தமிழ்நாடு அரசு பணியிடை நீக்கம் செய்து ஆணை பிறப்பித்துள்ளது. ஆனாலும் அவர் மீதுள்ள வழக்கு தொடர்பாக தொடர்ந்து சிபிசிஐடி விசாரணையானது நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாலியல் புகார் வழக்கைத் தாமாக முன்வந்து சென்னை உயர் நீதிமன்றம் கண்காணித்து வருகிறது. இதையடுத்து இவ்வழக்கானது விசாரணைக்கு வரும்போது, சிறப்பு டிஜிபியை ஏன் சஸ்பெண்ட் செய்யவில்லை என சிபிசிஐடி காவல்துறையினரிடம் நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.
முதற்கட்ட விசாரணையின் அறிக்கையை சிபிசிஐடி காவல்துறையினர், நீதிபதியிடம் சீலிட்ட கவரில் சமர்பித்தனர். தமிழ்நாடு முதலமைச்சர் சுற்றுப்பயணத்தின் போது பாதுகாப்புக்காக வந்த பெண் எஸ்பியை காரில் அழைத்து பாலியல் தொல்லை கொடுத்ததாக, சிறப்பு டிஜிபி மீது பாதிக்கப்பட்ட பெண் எஸ்பி தலைமை செயலாளர், டிஜிபியிடம் புகார் அளித்தார்.
இதுமட்டும் அல்லாமல் புகார் அளிக்க வரும்போது, புகார் அளிக்கவிடாமல் பெண் எஸ்பியைத் தடுத்து நிறுத்திய செங்கல்பட்டு எஸ்பி கொலை மிரட்டல் விடுத்ததாகவும் புகாரில் தெரிவித்திருந்தார். இது காவல்துறையினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சிறப்பு டிஜிபி மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என, எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் கண்டன அறிக்கை வெளியிட்டார். மேலும் 10க்கும் மேற்பட்ட பெண் ஐபிஎஸ் அலுவலர்கள் டிஜிபியை சந்தித்து சிறப்பு டிஜிபியை உடனடியாக சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.
இதனையடுத்து பாலியல் புகாரை விசாரிக்க பெண் ஐ.ஏ.எஸ், ஐபிஎஸ் அடங்கிய 6 பேர் கொண்ட குழுவை தமிழ்நாடு அரசு நியமித்தது. உடனடியாக சிறப்பு டிஜிபியை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றியும், செங்கல்பட்டு எஸ்.பியை பணியிட மாற்றம் செய்தும் உத்தரவிட்டது.
இதன் பின்னர் சிறப்பு டிஜிபியை பணியிடை நீக்கம் செய்தும், பெண் எஸ்.பி அளித்த புகாரை சிபிசிஐடி காவல்துறையினர் விசாரக்கவும் டிஜிபி உத்தரவு பிறப்பித்தார். செங்கல்பட்டு எஸ்பி, சிறப்பு டிஜிபி ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்து சிபிசிஐடி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதில், குற்றம்சாட்டப்பட்ட முன்னாள் சிறப்பு டிஜிபி, தடுத்து நிறுத்திய எஸ்பி ஆகியோரிடம் விசாரணை நடத்தினர்.
இதையும் படிங்க: மருத்துவர் பரிந்துரையின்றி போதை தரும் மாத்திரை வழங்காதீர்- ஆணையர் எச்சரிக்கை