சென்னை: அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் மீது டிசம்பர் 10ஆம் தேதி வரை புகாரளிக்கலாம் என விசாரணை ஆணையம் அறிவித்துள்ளது.
அண்ணா பல்கலைக்கழகத்தில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றதாக வந்த புகார்களை குறித்து விசாரிக்க சென்னை உயர் நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி கலையரசன் விசாரணை அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார். அவர் சூரப்பா மீதான புகார்கள் குறித்த விசாரணையை தொடங்கியுள்ளார்.
இச்சூழலில், துணைவேந்தர் சூரப்பா மீதான விசாரணை ஆணையத்தின் செயலர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் எம்.கே. சூரப்பா மீதான விசாரணை குறித்து தனிநபர் நிறுவனம், தொண்டு நிறுவனம், ஏனைய நிறுவனங்களிடமிருந்து அண்ணா பல்கலைக்கழகத்திற்கு தொடர்புடைய தற்காலிக நியமனங்களும் மற்றும் ஆள்சேர்ப்பும், நிதி பரிவர்த்தனைகள், ஒப்பந்தங்கள், பல்கலைக்கழகத்துடன் தொடர்புடைய ஏதாவது நபர்களின் பதவியின் செயல்பாடு குறைவு அல்லது அதிகாரத்தை தவறாக பயன்படுத்துதல் போன்ற குற்றச்சாட்டுகள் சம்பந்தமான புகார்கள் விசாரணை அலுவலர் பொன்.கலையரசன் விசாரணை அலுவலகத்தால் கோரப்படுகிறது.

இப்புகார்கள் 30ஆம் தேதியிலிருந்து பத்து தினங்களுக்குள் விசாரணை அலுவலகத்திற்கு எழுத்து மூலமாகவோ அல்லது மின்னஞ்சல் மூலமாகவோ அனுப்புமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா மீதான விசாரணை அலுவலர், பொதிகை வளாகம், பிஎஸ் குமாரசாமி ராஜா சாலை, சென்னை என்ற முகவரிக்கும், inquirycomn.vc.annauniv@gmail.com என்ற மின்னஞ்சல் மூலமாகவோ அனுப்பலாம்” என்று அதில் கூறப்பட்டுள்ளது.