கிரியேட்டிவ் எண்டர்டெய்னர்ஸ் அண்ட் டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் நிறுவனம் சார்பில் ஜி.தனஞ்செயன், லலிதா தனஞ்செயன் இணைந்து தயாரித்திருக்கும் படம் ‘கபடதாரி’. தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகியுள்ள இப்படத்தை பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கியுள்ளார். ஜி.தனஞ்செயன், ஜான் மகேந்திரன், ஹேமந்த் ராவ் ஆகியோர் திரைக்கதை எழுதியுள்ள இப்படத்திற்கு ராசாமதி ஒளிப்பதிவும், பிரவீன் கே.எல். படத்தொகுப்பு செய்துள்ளனர்.
அருண்பாரதி, கு.கார்த்திக் ஆகியோர் பாடல்கள் எழுதியுள்ளனர். சைமன் கே.கிங் இசையமைத்துள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் சிபிராஜ், நந்திதா ஸ்வேதா, ஜெயப்பிரகாஷ், ஜே.எஸ்.சதீஷ்குமார் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துகொண்டனர். மேலும் சிறப்பு விருந்தினர்களாக தயாரிப்பாளர் டி. சிவா, நடிகரும் இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி ஆகியோர் கலந்துகொண்டனர்.
படம் குறித்து தயாரிப்பாளர் தனஞ்செயன் கூறும்போது, ”இந்த படத்திற்கு வேறு ஒரு ஹீரோவை நடிக்க வைக்கத்தான் முயற்சித்தேன். ஆனால், சிபிராஜ்தான் என்னிடம் நானே நடிக்கிறேன் என்று கூறினார். சிபிராஜ் இந்த படத்திற்கு கச்சிதமாக இருக்கிறார். அவரது நடிப்பு சிறப்பாக உள்ளது. நந்திதா ஸ்வேதா ரெகுலர் நாயகிகள் போல், டூயட் பாடல் கேட்காமல், கதாபாத்திரத்தை புரிந்துக்கொண்டு நடித்திருக்கிறார்.
இசையமைப்பாளர் சைமன் கே.கிங் பெரிதும் பாராட்டப்படுவார். இந்தப் படத்தின் தெலுங்கு டிரைலர் வெளியானதும் அவருக்கு தெலுங்கில் நிறைய வாய்ப்புகள் வருகின்றன. தற்போது ஒரு படத்தில் ஒப்பந்தமாகியிருக்கிறார். தமிழிலும் அவர் முன்னணி இசையமைப்பாளராக வருவார். அந்த அளவுக்கு படத்தின் பின்னணி இசை அமைந்துள்ளது. எனக்கு பல நேரங்களில் உதவி செய்தவர் சிவா சார். நான் திரைத்துறைக்கு வந்ததிலிருந்து அவர் நிறைய உதவி செய்துள்ளார். அவருக்கு நன்றி.
ஜெயப்பிரகாஷ், நாசர் என அனைவரின் வேடமும் சிறப்பாக வந்துள்ளது. விஜய் ஆண்டனியுடன் தொடர்ந்து பயணிக்கிறேன். இனியும் தொடர்ந்து அவருடன் பல படங்கள் பணியாற்ற இருக்கிறோம். விழாவுக்கு வந்ததற்கு அவருக்கு நன்றி. ‘கபடதாரி’ எங்களுக்கு மட்டும் அல்ல சிபிக்கும் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமையும்.” என்றார்.
இதனைத் தொடர்ந்து நடிகர் சிபிராஜ் பேசுகையில், கரோனா காலத்திற்குப் பிறகு நான் பங்கேற்கும் முதல் சினிமா நிகழ்ச்சி இதுதான். கரோனா காலக்கட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய தமிழக அரசு, காவல் துறை, மருத்துவ பணியார்கள் என அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.
இசையமைப்பாளரும் நடிகருமான விஜய் ஆண்டனி பேசியதாவது, “தனஞ்செயன் சாரை எறும்பு போல சுறுசுறுப்பானவர் என்று சொன்னார்கள். பத்து எறும்பின் சுறுசுறுப்பு அவரிடம் உள்ளது. எல்லா பணிகளையும் ஈடுபாட்டுடன் செய்வார். தமிழ் சினிமாவுக்கு மிகவும் அவசியமான தயாரிப்பாளர். படத்தின் நாயகன் சிபியும் ரொம்ப இனிமையான மனிதர். மிகப்பெரிய நட்சத்திரத்தின் மகன் என்ற அடையாளமே இல்லாமல் இருப்பார். நான் இசையமைப்பாளராக இருக்கும்போதே அவர் என்னிடம் ரொம்ப இயல்பாக பழகுவார்.
இவர்களுடைய பட விழாவுக்கு வந்தது மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த படம் மிக சிறப்பாக வந்துள்ளது. மாஸ்டர் போன்ற பெரிய படங்கள் வெற்றி பெற்றது போல, இந்த படமும் வெற்றி பெறும். அதற்கு விமர்சகர்கள் ஒத்துழைக்க வேண்டும். மற்ற நேரங்களில் பரவாயில்லை. ஆனால், இப்படி ஒரு கஷ்டமான காலக்கட்டத்தில் பெரிதாக விமர்சிக்காமல் இருப்பது நல்லது.
மக்கள் தியேட்டருக்கு வரவேண்டும், பெரிய படங்கள் போல சிறிய படங்களும் வெற்றி பெற வேண்டும். இந்த படம் ஏற்கனவே வெற்றி பெற்ற படம்தான். நிச்சயம் தமிழிலும் மிகப்பெரிய வெற்றி பெறும்” என்றார். கபடதாரி படம் ஜனவரி 28ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.
இதையும் படிங்க:'Follow Follow Me': செல்லப்பிராணி காதலர்களுக்கான இசை ஆல்பம்!