சென்னை, திருவல்லிக்கேணி, அனுமந்தபுரம் பகுதியை சேர்ந்தவர் பிரகாஷ் (26). பெயிண்டராக வேலை பார்த்த இவரது சொந்த ஊர் மதுரை ஆகும். இவர், மீது சென்னை மற்றும் மதுரையில் குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்நிலையில், கடந்த 2019ஆம் ஆண்டு அக்டோபர் 10ஆம் தேதி ஆவடி அடுத்த காட்டூர், அந்தோணி நகரில் உள்ள காலி மைதானத்தில் பிரகாஷை மர்ம நபர்கள் வெட்டி கொலை செய்தனர்.
இது குறித்து ஆவடி டேங்க் பேக்டரி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில், மாதவரம், ரெட்டேரி பகுதியைச் சேர்ந்த கார்த்திக் (26), மற்றும் அவரது கூட்டாளிகள் பெரம்பூர், சத்தியபாமா தெருவைச் சேர்ந்த அரவிந்த் (18), குமார் (30) ஆகிய மூவரை காவல்துறையினர் கைது செய்தனர். விசாரணையில், குடும்ப பிரச்னை காரணமாக பிரகாஷை, அவரது சகலை கார்த்திக் நண்பருடன் சேர்ந்து கொலை செய்தது தெரியவந்தது.
மேலும், இந்த வழக்கில் தொடர்புடைய, பிரகாஷின் மாமியார் திருவல்லிக்கேணியை சேர்ந்த சகுந்தலா (45) தலைமறைவாக இருந்தார். அவரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வந்த நிலையில், சகுந்தலாவை ஒன்றரை ஆண்டுக்கு பிறகு கைது செய்தனர். பின்னர், அவரை அம்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க:பெண் தற்கொலையில் சந்தேகம்; மாமியார் வீட்டுக்கு தீ வைத்து எரித்த உறவினர்கள்!