சென்னை: பரங்கிமலையில் உள்ள ராணுவ அலுவலர்கள் பயிற்சி மையத்தில் குறுகிய கால ராணுவ சேவைக்கான பயிற்சி கொடுக்கப்படுகிறது. 49 வாரங்கள் நடைபெறும் இந்தப்பயிற்சிக்கு பின் நான்கு ஆண்டுகளில் இருந்து பத்து ஆண்டுகள் வரை ராணுவத்தில் பணியாற்றுவர்.
இந்த ராணுவ அலுவலர் பயிற்சி மையத்தில் பயிற்சி முடித்துச்செல்லும் மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் உறுவினர்கள் காணும் வகையில் குதிரையேற்றம், ஜிம்னாஸ்டிக் உட்பட பல்வேறு சாகச நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் பயிற்சி பெற்ற மாணவர்கள் குதிரையேற்ற சாகசங்களை செய்தனர்.
தடைகளைத் தாண்டுதல், குதிரையில் இருந்தே இலக்குகளை தாக்குதல் உள்ளிட்ட சாகசங்களை செய்து அசத்தினர். பின்னர் பயிற்சி மையத்தில் உள்ள உடற்பயிற்சி ஆசிரியர்கள் ஜிம்னாஸ்டிக் சாகசங்களை செய்தனர். அவர்களை தொடர்ந்து பேண்ட் வாத்தியக் கலைஞர்களின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது.
இறுதியாக தற்காப்புக் கலையான களரிப்பயிற்று சாகச நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் களரி பயிற்சிபெற்ற வீரர்கள் செண்ட மேள இசைக்கேற்ப நடனமாடியும், ஆயுதங்களைக் கொண்டும் பல்வேறு சாகசங்களை செய்தனர்.
சென்னை ராணுவ அலுவலர்கள் பயிற்சி மையத்தின் கமான்டெண்ட் லெப்டினன்ட் ஜெனரல் சஞ்சீவ் சவுஹான் முன்னிலையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் சாகசசெயல்கள் செய்த வீரர்களுக்கு நினைவுப்பரிசுகள் வழங்கினர்.
இதையும் படிங்க: கோவையில் தொடர்ந்து கந்துவட்டி சம்பந்தமாக சோதனை நடைபெறும்: மாவட்ட காவல் கண்காணிப்பாளர்