சமூகத்தின் மீதான பற்றோடு எதையும் புதுமையாக செய்வதில் ஆர்வம் கொண்டவர் தாம்பரத்தை சேர்ந்த மதன். தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வரும் மதன், திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் வெரைட்டி டான்சராகவும் இருந்து வருகிறார். சில ஆண்டுகளுக்கு முன்பு காற்று புகமுடியாத ஸ்ப்ரிங் பலூனில் தலையை நுழைத்து, சுமார் ஒரு மணி நேரம் மூச்சை அடக்கி சாதனை படைத்த மதனை பாராட்டி, தமிழ்நாடு பல்கலைக்கழகம் டாக்டர் பட்டம் வழங்கி சிறப்பித்திருக்கிறது.
கரோனா காலத்திலும் உயர்ந்த மனிதன் போல் வேடமிட்டும், டிராகன் போன்ற உருவம் பொறித்த ஆடை அணிந்தும், கரோனா குறித்த பல்வேறு விழிப்புணர்வை பொதுமக்களுக்கு இவர் ஏற்படுத்தியுள்ளார். இந்நிலையில்தான், மனித இனத்தையே அச்சுறுத்தும் கொடிய கரோனாவில் இருந்து நம்மை பாதுகாக்க சேவையாற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள், ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள், தூய்மை பணியாளர்கள் என அனைவருக்கும் நன்றி தெரிவிக்க திட்டமிட்டார் மதன்.
இதனால் இன்று மணிமங்கலத்தில் இருந்து தி.நகர் வரை இருசக்கர வாகனத்தில் வந்தார் மதன். இதில் என்ன இருக்கிறது என்கிறீர்களா? அவர் வந்தது தலை இல்லாமல். ’ஹாலோ மேன்’ படத்தில் வரும் கதாபாத்திரம் போல் உடையணிந்து தலை இல்லாமல், முன்களப் பணியாளர்களுக்கு வித்தியாசமான முறையில் பூக்களை கொடுத்து நன்றி தெரிவித்தார் மதன்.
சாலையில் பணி அவசரத்தில் சென்ற பொதுமக்கள், தலையில்லாமல் பூக்கள் கொடுக்கும் மதனின் உருவத்தை பார்த்து அங்கேயே நின்றனர். ஆச்சரியத்துடன் பார்த்த அவர்கள் அவருடன் செல்ஃபியும் எடுத்துக் கொண்டனர். மதனின் இந்த வித்தியாச நன்றி செலுத்துதலை நகராட்சி ஊழியர்கள், போக்குவரத்து காவலர்கள் வாழ்த்தினர்.
இதையும் படிங்க: கரோனா கடந்து போகும்வரை கல்வி நிலையங்களை திறக்க வேண்டாம் - வைரமுத்து