சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில் மாற்றுத் திறனாளிகள் நலத்துறை, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை ஆகிய துறைகளின் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் இன்று (செப். 1) நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வீட்டு வசதி மற்றும் நகர்புற வளர்ச்சித்துறை விவாதத்தின் போது சட்டப்பேரவையில் உரையாற்றினார். அதில் பேசிய முதலமைச்சர்,"கோட்டையில் இருந்தாலும் குடிசையில் வாழும் மக்களின் முன்னேற்றத்திற்காக சிந்தித்தவர் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி.
என்றும் தமிழ்நாடுதான் முன்னோடி
அந்தவகையில், முதல் முறையாக அவர் ஆட்சிக்கு வந்தபோது மக்களின் வாழ்க்கையினுடைய மேம்பாட்டிற்காக குடிசை மாற்று வாரியம் எனும் திட்டத்தை தொடங்கினார். அதன் மூலமாக பல்லாயிரக்கணக்கான அடுக்குமாடி குடியிருப்புகளை உருவாக்கினார்.
அன்று ஒன்றிய அமைச்சராக இருந்த பாபு ஜெகன் ஜீவன், இத்திட்டத்தை பாராட்டி புகழ்ந்து பேசி இருக்கிறார். அதுமட்டுமின்றி, தமிழ்நாடு மட்டும் அல்லாமல் இந்தியா முழுவதும் உள்ள மற்ற மாநிலங்களுக்கும் இந்த திட்டம் கொண்டு வர வேண்டும் எனக் கூறியிருந்தார்.
மிகச் சிறப்பாக குடிசை மாற்று வாரியம் மூலம் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில், ஏழை எளிய மக்களின் வாழ்க்கை மேம்பாட்டிற்காக கொண்டு வரப்பட்ட இந்த வாரியம் இனி, தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் என அழைக்கப்படும்" என்று அறிவித்தார்.
இதையும் படிங்க: முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்த பவன் கல்யாண்