சென்னை: சிவசங்கர் பாபாவின் பக்தையும், சுஷில்ஹரி பள்ளியின் ஆசிரியருமான சுஷ்மிதாவை சிபிசிஐடி காவல்துறையினர் கைது செய்தனர்.
காஞ்சிபுரம் மாவட்டம், கேளம்பாக்கம் பகுதியில் சுஷில்ஹரி சர்வதேசப்பள்ளி இயங்கி வருகிறது. இதன் தாளாளர் சிவசங்கர் பாபா. இவர், தனது பள்ளியில் பயின்ற மாணவிகளிடம், பாலியல் அச்சுறுத்தலில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.
கைதுக்கு பின் மூச்சுத்திணறல்
இதனைத்தொடர்ந்து, போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து, டெல்லியில் சிவசங்கர் பாபாவை சிபிசிஐடி., காவலர்கள் கைது செய்து தமிழ்நாட்டிற்கு கொண்டு வந்தனர்.
இதன்பின் சிவசங்கர் பாபாவை செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியதை அடுத்து, ஜூலை 1ஆம் தேதிவரை நீதிமன்ற காவல் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.
இதைத்தொடர்ந்து, சிறையிலடைக்கப்பட்ட அவருக்கு திடீர் மூச்சுத்திணறல் ஏற்பட சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.
பக்தையும் கைது
இந்நிலையில், பள்ளி மாணவிகளை சிவசங்கர் பாபாவிடம் அழைத்துச்சென்றதாகக் கூறப்பட்ட அவரின் பக்தையும், சுஷில்ஹரி பள்ளியின் ஆசிரியருமான சுஷ்மிதா இன்று (ஜூன்.18) சிபிசிஐடி காவலர்களால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சுஷ்மிதாவிடம் நடத்திய விசாரணையில் சுஷில்ஹரி பள்ளியில் பயின்ற போது சிவசங்கர் பாபாவின் தீவிர பக்தையாக மாறியதால் சிவசங்கர் பாபா சுஷ்மிதாவை குடும்பத்துடன் சுஷில்ஹரி பள்ளியிலேயே இடம் கொடுத்து தங்க வைத்துள்ளார்.
பக்தையின் மூளைச்சளவை
பொருளாதாரத்தில் பின்தங்கிய பள்ளி மாணவிகளை சுஷ்மிதா குறிவைத்து மூளைச்சலவை செய்து சிவசங்கர் பாபாவிடம் அழைத்து சென்றிருப்பது தெரியவந்தது.பொருளாதாரத்தில் பின் தங்கிய மாணவிகள் என்பதால் வெளியே சொன்னால் படிப்பு பாழாகிவிடும் என்று சொல்லாமலே இருந்ததாக கூறினார்.
பாதிக்கப்பட்ட மாணவி அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் பாலியல் தொல்லைக்கு உடந்தையாக இருந்ததாக சுஷ்மிதா கைது செய்யப்பட்டுள்ளதாக சிபிசிஐடி காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்ட சுஷ்மிதாவை மருத்துவ பரிசோதனைக்கு அழைத்து சென்று செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளனர்.
மேலும், மாணவிகள் குற்றம்சாட்டிய ஆசிரியை கருணா, நீரஜிடம் தொடர்ந்து சிபிசிஐடி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: சிகிச்சைக்காக ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிவசங்கர் பாபா