சென்னை பாஜக அலுவலகத்தில் இன்று, அக்கட்சியின் தமிழக பொறுப்பாளர் சி.டி.ரவி, மாநிலத் தலைவர் எல்.முருகன் ஆகியோர் முன்னிலையில், நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மூத்த மகன் ராம்குமார், தனது மனைவி, மகன் துஷ்யந்த் மற்றும் மருமகள் ஆகியோருடன் இன்று பாஜகவில் இணைந்தார். இவர்களோடு, குன்னூர் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் சவுந்தர பாண்டியன், ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் சிலரும் பாஜகவில் இணைந்தனர்.
அப்போது பேசிய எல்.முருகன், ராம்குமார் தனது குடும்பத்துடன் தேசிய நீரோட்டத்தில் இணைந்துள்ளதாகத் தெரிவித்தார். சிவாஜி கணேசன் நடிப்பால் தமிழகம் பெருமை பெற்றதாகவும், அவரது மகன் பாஜகவில் இணைந்திருப்பதன் மூலம், கட்சியின் வளர்ச்சி மிகப்பெரிய அளவில் இருக்கும் என்றும் சி.டி.ரவி கூறினார். மேலும், ராம்குமார் வருகையால் வரும் தேர்தலில் தாமரை மலர்ந்தே தீரும் என்றும் அவர் கூறினார்.
பின்னர் பேசிய ராம்குமார், ”தேசியத்தையும், தெய்வீகத்தையும் ஒன்று கலந்து நடித்தவர் சிவாஜி. மோடியும் அந்த வழியிலேயே பயணிக்கிறார். இந்திய மக்களின் சுய மரியாதையை காக்க பல திட்டங்களை கொண்டு வந்துள்ள அவரின் கரத்தை பலப்படுத்த வேண்டும். மோடியின் வழியே இனி எனது வழி. வருங்காலத்தில் தாமரை மலரும்” என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: திமுகவைவிட அதிகமுறை ஆட்சி செய்தது அதிமுக: அமைச்சர் ஜெயக்குமார்!