தமிழ்நாடு பால்வளத் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை, சிக்கிம் மாநில கால்நடை பராமரிப்பு மற்றும் தோட்டக்கலைத் துறை அமைச்சர் லோக்நாத் சர்மா, அமைச்சரின் இல்லத்தில் சந்தித்துப் பேசினார். சந்திப்பிற்குப் பின் இருவரும் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர்.
அப்போது பேசிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, “சிக்கிம் மாநிலத்தில் பல மொழி பேசக்கூடிய மக்கள் இருக்கின்றனர். இயற்கை உணவு மீது அந்த மக்கள் மிகவும் பிரியம் கொண்டுள்ளனர். சிக்கிம், தமிழ்நாடு ஒன்றிணைந்து அந்த மாநிலத்தில் பால் பண்ணை அமைப்பது குறித்து பேசியுள்ளோம். முதலமைச்சரிடம் இது குறித்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும்“ என்றார்.
ஸ்டாலின் முதலமைச்சராவதை எந்தக் கொம்பனாலும் தடுக்க முடியாது என்ற துரைமுருகனின் கருத்துக்கு பதிலளித்த அமைச்சர், எந்தக் கொம்பனும் தடுக்க வேண்டாம், அவர்களே தடுத்துவிடுவார்கள் என்று கிண்டலாகக் கூறிய அவர், ஸ்டாலினால் கனவில்கூட முதலமைச்சராக முடியாது என்றும் தெரிவித்தார்.
களியக்காவிளையில் கொல்லப்பட்ட சிறப்புக் காவல் உதவி ஆய்வாளர் வில்சன், கிறிஸ்தவ சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதாலும், அவரைக் கொலைசெய்தவர் முஸ்லிம் என்ற காரணத்தாலும் திமுக எந்த வருத்தமும் தெரிவிக்கவில்லை, அதற்காக எந்தப் போராட்டமும் நடத்தவில்லை என்று குற்றஞ்சாட்டிய ராஜேந்திர பாலாஜி, அதிமுக யார் குற்றம் செய்தாலும் கண்டிக்கும் என்றார்.
பயங்கரவாதத்திற்கு ஆதரவாக இஸ்லாமியர்களிடம் பணம் பெற்றுக்கொண்டு அவர்கள் செய்யும் குற்றத்தை திமுக மறைக்கிறது என்றும், இந்துக்கள் இறந்தாலும் கவலை இல்லாமல், அவர்கள் வாக்குகள் மட்டும் வேண்டும் என்கிற நோக்கத்தில் திமுக உள்ளதாக அவர் கடுமையாகச் சாடினார்.
மற்ற மத கடவுளுக்கும் தமிழில் வழிபாடு செய்ய வேண்டும் எனப் போராடாமல், இந்துக் கோயிலில் மட்டும் தமிழில் குடமுழுக்கு செய்ய வேண்டும் என்று போராடுபவர்களின் கருத்தில் உள்நோக்கம் உள்ளதாகவும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசினார்.
'பெரியார் காலத்தில் அவர் பேசியது சரி. ஆனால், இந்தக் காலத்திற்கு அது ஏற்றுக் கொள்ள முடியாது' என்றும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்தார்.
இதையும் படிங்க: 'அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சொன்னது பொய்' - மன உளைச்சலில் சிவகாசி சிறுமியின் குடும்பத்தார்