சென்னை, திருவான்மியூரில் உள்ள இம்ப்காப்ஸ் நிறுவன வளாகத்தில் இம்ப்காப்ஸ் தலைவர் மருத்துவர் கண்ணன் கரோனாவிற்கு எதிரான நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிக்கும் சித்த, ஆயுர்வேத, யுனானி மருந்துகளை அறிமுகம் செய்து வைத்தார். அதன்படி ஆக்சிஜன் குறைபாடுகளை களைவதற்கான மருந்துகளாக தாளக கற்பம், முத்து பற்பம், கஸ்தூரி கருப்பும், கரோனாவின் பிந்தைய பாதிப்புகளை களைவதற்கு ஆயுஷ் குடிநீர் சூரணம், அமுக்குரா சூர்ணம் மாத்திரை, ச்யவனப்ரச லேகியம் (chyavanaprash) ஆகியவை அறிமுகம் செய்யப்ப்பட்டன.
மேலும் கரோனாவை தடுப்பதற்கு சித்தா மருந்துகளான ஓமத் தீநீர், பிரம்மானந்த பைரவம், கபசுரம், வசந்த குஷ்மாகரம், திப்பிலி ரசாயனம், ஆனந்த பைரவம், தாளிசாதி வடகம், ஆடாதொடை சூரணம் ஆயுர்வேத மருந்துகளான சுதர்சன சூரண மாத்திரை, சுப்ரவாடி மாத்திரை, இந்துகாந்தம் கசாயம், குடூசி ஸத்வம், அகஸ்திய ரசாயனம், யஷ்டி சூரணம், தாளீசாதி சூரணம், யுனானி மருந்துகளான ஷர்பத் ஸூஆல், லவூக் கதான் தவா ஷிபா ஹலாக், லபூர் ஸகீர், கௌஹர் ஷீபா ஆகிய மருந்துகளை அறிமுகம் செய்து வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய இம்ப்காப்ஸ் தலைவர் கண்ணன், "கரோனா முதல் அலையில் கபசுரக் குடிநீர் பொதுமக்களுக்கு பெரிய அளவிலான தற்காப்பு உணர்வை தந்தது. ஆயுஷ் அமைச்சகம் இந்தியா முழுவதும் கபசுராவை விநியோகிக்குமாறு கூறியுள்ளது. குடிசைத் தொழில்போல சிலர் போலியாக கபசுராவை தயாரித்தார்கள். எனவே மக்கள் உண்மையான கபசுராவை பார்த்தறிந்து வாங்க வேண்டும்.
கரோனாவை எதிர்க்கும் மருந்துகள்
நேற்று சுகாதாரத்துறை அமைச்சரிடம் கரோனா எதிர்பாற்றலை அதிகரிக்கும் சித்தா, ஆயுர்வேதம், யுனானி மருந்துகள் சிலவற்றை குறித்து பரிந்துரை செய்திருந்தோம். ரத்தத்தில் ஆக்சிஜன் அளவு அதிகரிக்க தாளக பஸ்பம், முத்து பஸ்பம், பவள பஸ்பங்கள் குடிக்க வேண்டும். அஜீப் மருந்தை ஆவி பிடித்தால் தொண்டை பிரச்சனைகள் சரியாகும். அதேபோல், ஆயுர்வேதாவில் கரோனா இரண்டாம் அலையை எதிர்கொள்ள குடுச்சி சத்வம், இந்துகாந்த கஷாயம், அகஸ்திய ரசாயனம், யஷ்டி மாத்திரை, சுப்ரவடி, சுதர்சன சூரணம் மருந்துகள் உள்ளன.
யுனானியில் ஷர்பத் ஸ்வால், தவா சிபா ஹலக், லபூப் சகீர், லவுக் காத்தான் ஆகிய மருந்துகள் உள்ளன. சித்த மருத்துவத்தில் நிலவேம்பு குடிநீர், கபசுரக் குடிநீர், ஆடாதோடை குடிநீர், தாளிசாதி வடகம், ஆனந்த பைரவம், பிரமானந்த பைரவம், வசந்த குசுமாகரம், தாளிசாதி சூரணம், திப்பிலி ரசாயனம், ஓமந்த் தேநீர் ஆகிய மருந்துகள் கரோனா இரண்டாம் அலையை எதிர்கொள்ளும் சக்தி படைத்துள்ளன.
தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும்
கரோனாவிலிருந்து மீண்டாலும் பசியின்மை, தூக்கமின்மை பாதிப்பு பலருக்கு இருக்கிறது. குளிர்ந்த நீர் குடித்ததால் காய்ச்சல் வந்ததாக பலர் இப்போதும் சொல்லுகின்றனர். ஆனால் காய்ச்சல் வந்தவுடனே பிசிஆர் சோதனையை மேற்கொள்ள வேண்டும். சித்தா உள்ளிட்ட ஆயுஷ் மருந்துகளை கரோனா தோயாளிகளுக்கு முதல் நாளிலேயே வழங்க நவீன மருத்துவர்கள் முன்வர வேண்டும். இதை தமிழ்நாடு அரசிடம் வேண்டுகோள் வைக்கிறோம். பூர்ண சந்திரோதயம் மருந்தை ஐசியூ சிகிச்சையில் இருப்போருக்கு வழங்கினால் நல்ல பலன் இருக்கும்.
தமிழ்நாடு அரசுக்கு ஆலோசனை வழங்கும் மருத்துவக் குழுவில் சித்த மருத்துவர்களையும் இணைக்க வேண்டும். முதலமைச்சர் ஸ்டாலின் பொறுப்பேற்றவுடன் சித்த மருத்துவ கோவிட் நிலையத்தை அவரே சென்று திறந்து வைத்திருக்கிறார். இதன் மூலம் வரும் நாள்களில் சித்த மருந்துகளின் பயன்பாடுகளுக்கு முதலமைச்சர் அதிக முக்கியத்துவம் தருவார் என்ற நம்பிக்கை எங்களுக்கு வந்துள்ளது.
பாலசஞ்சிவி, கஸ்தூரி மாத்திரைகள் உள்ளிட்டவற்றை குழந்தைகளுக்கு வழங்கலாம். இதன் மூலம் கரோனா காரணமாக இழந்த சுவை, மணம் திரும்ப கிடைக்க உதவும். உலக சுகாதார நிறுவனமே ஆவிப் பிடித்தல் நல்ல பலன் தருவதாகக் கூறியுள்ளது. காய்ச்சல் வந்த முதல் நாளிலேயே சித்த மருந்துகளை நாடினால் ரெம்டெசிவிருக்காக மக்கள் காத்திருக்க வேண்டிய அவசியம் ஏற்படாது" என்று கூறினார்.